எனக்கு அரசியல்னா என்னனே தெரியாது. நான் கண்டிப்பா வரமாட்டேன் என நடிகர் விஜய் மேடையில் கூறும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள விஜய், அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அவரது விஜய் மக்கள் இயக்கம் நடைபெற்று உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றிப் பெற்றது.
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என விஜய் கூறிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விஜயகாந்த் உடனான உறவு குறித்த கேள்விக்கு, “விஜயகாந்த் சார் என்னோட சொந்த அண்ணன் மாதிரி. அவரும் என்னை சொந்த தம்பினு சொல்வாரு. சான்ஸ் கிடைச்ச நிச்சயம் அவர் கூட சேர்ந்து நடிப்பேன்,” என்று விஜய் கூறினார்.
சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துருக்காங்க, எதிர்காலத்தில் நீங்க அரசியலுக்கு வருவீங்களா? அந்த எண்ணம் இருக்கா? என்ற கேள்விக்கு, ”நிச்சயமான இல்லை. எனக்கு அரசியல்னா என்னனே தெரியாது. நான் கண்டிப்பா வரமாட்டேன்” என்று விஜய் கூறினார்.
சினிமாவில் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, “எனக்கு சினிமாவில் பிடிக்காத நடிகர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாரையும் பிடிக்கும், எல்லாரையும் ரசிப்பேன்,” என்று விஜய் கூறினார்.
மேலும், ”என்னுடைய தங்கை வித்யா இறந்தபோனது என்னை மிகவும் பாதித்த விஷயம். என் தங்கையை புதைக்கல, விதைத்திருக்கிறோம். எனக்கு ரொம்ப சந்தோசமான நாள், என்னுடைய முதல் படம் நாளைய தீர்ப்பு ரிலீஸ் ஆன டிசம்பர் 4, 1992 தான். ஏனென்றால், அந்த படம் மூலமாகத் தான் நான் உங்களிடம் அறிமுகமானேன்.
நான் நடித்த படம் வெற்றியடைவதற்கு காரணம் நீங்கள் தான். நான் சும்மா நடிச்சுக்கிட்டு தான் இருக்கேன். வெற்றியை கொடுப்பது நீங்கள் தான். அப்புறம் நான் தேர்வு செய்கிற கதைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் வெற்றிக்கு காரணம்.
எல்லோர் கூடயேயும் அன்பா பழகுறது என்னுடைய இயல்பான குணம்தான். சினிமாவுக்காக மாத்திக்கல. நான் உண்மையாவே அமைதியான ஆள் தான். கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்வேன். அதுக்கு மேல என்ன பேசுறதுனே எனக்கு தெரியாது,” என்றும் விஜய் கூறினார். அப்போது ரசிகர்களும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் விஜயை சின்ன சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர்.