இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.
அதேவேளை, ஹமாஸ் போன்று இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் பல ஆயுத குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுத குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதுகிறது. இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனிடையே, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் தலைவன் காதர் அதானென் (வயது 45) கடந்த 2-ம் திகதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார்.
எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் தன்னை இஸ்ரேல் படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறி காதர் இஸ்ரேல் சிறையில் கடந்த 86 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 86 நாட்களாக உணவு சாப்பிடாமல் உண்ணாவிரத போராட்டம் நடத்திய காதர் கடந்த 2ம் திகதி உயிரிழந்தார்.
இதையடுத்து, காதர் அதெனென் உயிரிழப்பிற்கு இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், காசா முனை மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் 3 தளபதிகள் கொல்லப்பட்டனர்.
குடியிருப்பு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் 3 தளபதிகள், குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து காசாமுனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமிக் ஜிகாத், ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் இடையே இன்றும் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.