சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் லிமிடெட் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை தமது ஊழியர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததன் விளைவாக இப்போது கடுமையான நிதி விளைவுகளை எதிர்கொள்வதாக கணக்காய்வாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2022, ஆகஸ்ட் இறுதியில் சுமார் 1,051 பில்லியன் ரூபா திரட்டப்பட்ட இழப்பை பதிவு செய்தது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் செலுத்தவேண்டி மொத்த நிலுவைத் தொகை 2021 இல் 3.36 பில்லியன் ரூபாவாகவும், 2022 இல் 4.31 பில்லியன் ரூபாவாகவும் இருந்தன.
நிறுவனங்களால் குறிப்பிடத்தக்க கடன் திட்டம் பராமரிக்கப்பட்டு வந்தாலும், கடன் தொடர்பில் முறையான நிதிக் கொள்கை எதுவும் நிறுவப்படவில்லை.
அத்துடன் ஊழியர்களின் அடிப்படை வருமானம், கடன் தவணை மற்றும் இதர செலவுகளுக்கு போதுமானதாக இல்லாத காரணத்தால், அவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது.
கூட்டுத்தாபனத்தின் மொத்த ஊழியர்களில் 40 சதவீதத்துக்கும் மேலானவர்களும், ஸ்டோரேஜ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களும் தங்களது அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு மேல் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல் பொருத்தமற்ற கடன் திட்டங்களைச் செயல்படுத்தியதன் விளைவாக, ஊழியர்கள் கடன் வாங்கத் தூண்டப்பட்டனர்,
இது நிறுவனங்களின் கூடுதல் நேரச் செலவுகளில் தேவையற்ற அதிகரிப்பை நேரடியாகப் பாதித்தது என்று கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் நிறுவனம் ஆகியவற்றில் 4,200 பணியாளர்கள் உள்ளனர்.
எனினும் இந்த நிறுவனங்களுக்கு 500 பேரின் தேவை மாத்திரமே உள்ளது.
இதற்கிடையில் சபுகஸ்கந்தவில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவாக 2021-2022இல் 3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என்றும் கணக்காய்வாளரின் அறிக்கை கூறுகிறது.