உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 430-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
உக்ரைனின் டின்புரொ, யுமென் நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து நேற்று அதிகாலை ரஷியா அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா தீபகற்பத்தின் சிவஸ்டொபெல் நகரில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது இன்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் நடத்திய இந்த டிரோன் தாக்குதலில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த டிரோன் தாக்குதலியில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் அங்கமாக இருந்த கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014-ம் ஆண்டு படையெடுத்து ரஷியா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.