கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று பகல் இடம்பெற்ற ஆபாயகரமான விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதி பின்னர் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மோதித்தள்ளியதுடன், வீதி அருகில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கற்களுடனும் மோதியுள்ளது. அப்பகுதியில் உள்ள மரத்துடன் மோதி குறித்த வாகனம் நின்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் இருந்த சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய கப் வாகனத்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் 15க்கு மேற்பட்டவர்கள் பேருந்து சேவையை பெற்றுக்கொள்வதற்காக கூடுவர். குறித்த விபத்து இடம்பெறுவதற்கு சற்று முன்னர் பேருந்தில் பயணிகள் ஏற்றிச் சென்றமையால் விபத்தினால் ஏற்படக்கூடிய பாரிய இழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.