கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு எதிராக சட்டநடவடிக்கை !

Date:

ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும் ஐ. அப்துல் ஹாதிக் எனும் மாணவனே இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை – குறித்த பாடசாலையில் வைத்து ஐ.எம். பஹாரி எனும் ஆசிரியர் தனக்கு பிரம்பால் ஒரு தடவை அடித்ததாகவும், இன்னொரு தடவை தனது ‘சேர்ட் கொலரை’ பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தன்னை தூக்கி வீசியதாகவும் மாணவர் ஹாதிக் தெரிவிக்கின்றார்.

தற்போது பாதிக்கப்பட்ட மாணவர் நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அக்கரைப்பற்றுக் காரியாலயம் ஆகியவற்றில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே – மனித உரிமை ஆணைக்குழுவில் தாங்கள் முறையிட்டதாகவும் மாணவனின் தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) கூறுகின்றனர்.

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வந்திருந்த மாணவன் ஹாதிக் ஊடகவியலாளருடன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசினார்.

“சம்பவ நேரத்தில் எனது வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் மேசையில் தலை வைத்து படுத்திருந்தேன். அப்போது பக்கத்து வகுப்பில் இருந்த பஹாரி என்கிற ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து விளையாடிய மாணவர்களுக்கு அடித்தார். அப்போது எனக்கு ஏன் அடிக்கவில்லை என்று ஒரு மாணவன் கேட்டான். அதனால் பிரம்பால் எனக்கு இரண்டு தடவை ஆசிரியர் அடித்தார்” என்று, அன்று நடந்த விடயத்தை மாணவன் ஹாதிக் கூறத் தொடங்கினார்.

“பிறகு தகரத்தில் யார் அடித்தது என்று சேர் கேட்டார். அதற்கு இரண்டு மாணவர்களின் பெயரைக் கூறி அவர்கள்தான் என்றேன். அப்போது மீண்டும் என்னை அடிப்பதற்கு ஆசிரியர் வந்தார். அப்போது ஏன் சேர் திரும்ப திரும்ப அடிக்கிறீங்க என்று கேட்டேன். அதற்கு ‘அறப்படித்த வாப்பாக்கு மூத்த கதை கதைக்காதே’ என்று கூறிவிட்டு – எனது சேர்ட் கொலரைப் பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தூக்கி வீசினார்” என அந்த மாணவன் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தனது கால் அடிபட்டு சதை உடைந்து, முழங்கால் சில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனக்கு நடக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது பாரம்பரிய முறிவு வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் ஹாதிக்கின் காலில் ‘பற்று’ போடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மூன்றாந் தவணை பரீட்சை ஆரம்பித்துள்ள நிலையில், பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் சென்று – பரீட்சைக்குத் தோற்றி விட்டு, தனது தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) ஆகியோருடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஹாதிக் சென்றிருந்தார்.

தனது புத்தகப் பையை பாடசாலையிலேயே – தான் விட்டு வந்ததாகவும், அதனை எடுத்து வருமாறு சிலரை அனுப்பிய போதும், தங்கள் குடும்பத்தவர்கள் வந்தால் மட்டுமே புத்தகப் பையை வழங்க முடியும் என, அங்குள்ள ஆசிரியர் ஒருவர் கூறியதாகவும் மாணவன் ஹாதிக் தெரிவித்தார். இதனால், பரீட்சைக்காக படித்து தயாராக முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் சகோதரர் யு.எல். முபாஹித் கூறுகையில்;

“சம்பவம் நடந்து 06 நாட்களின் பின்னர் எனக்கும் எனது பெரியப்பா மற்றும் அவரின் மகனுக்கும் எதிராக பாடசாலையின் அதிபர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாங்கள் அவரை அச்சுறுத்தியதாக அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது பொய்யான முறைப்பாடு” என்றார்.

“அதிபரின் முறைப்பாடு தொடர்பில் கடந்த 04ஆம் திகதி அக்கரைப்பற்று பொலிஸார் எம்மை அழைத்திருந்தார்கள். நாங்கள் சென்றோம். ஆனால் முறைப்பாடு செய்த அதிபர் வரவில்லை. நாங்கள் வாக்குமூலத்தை வழங்கி விட்டு – வந்து விட்டோம்” எனவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட தனது தம்பியான மாணவன் ஹாதிக்கை தனது முச்சக்கர வண்டியிலேயே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவன் ஹாதிக்கின் தாய் ஆத்திக்கா உம்மா இச் சம்பவம் குறித்து பேசுகையில், தனது மகனை ஆசிரியர் அடித்து, அவரைத் தூக்கி வீசியதாகக் கூறினார். இதன்போது தனது மகனின் சட்டை பொத்தான்கள் அறுந்து போனதாகவும், அதனை கட்டுவதற்காக பக்கத்து வீட்டுக்கு ஊசி – நூலை ஆசிரியர்கள் கேட்டு அனுப்பியிருந்ததாகவும் கூறினார். “விடயத்தை நான் அறிந்ததும் பாடசாலைக்குச் சென்றேன். அங்கு எனது பிள்ளையை பார்ப்பதற்கு ஆசிரியர்கள் முதலில் அனுமதிக்கவில்லை. பின்னர் நான் வாக்குவாதப்பட்டுத்தான் பிள்ளையை பார்த்தேன். அதன் பிறகு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்”.

“சம்பவம் நடந்த போது எனது பிள்ளையிடம் அதிபர் சென்று – என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஆசிரியர் தன்னைத் தாக்கியதாக மகன் கூறியுள்ளார். அப்போது, ‘சேர் அடித்திருக்க மாட்டார், நீ சறுக்கி விழுந்திருப்பாய்’ என்று அதிபர் கூறியிருக்கிறார். அதனால்தான் பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல நாங்கள் முடிவு செய்தோம்” எனவும் மாணவனின் தாயார் கூறினார்.

“அக்கரைப்பற்று வைத்தியசாலையில் எனது மகன் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு அவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனக் கூறி – ‘டிக்கட்’ வெட்டி அனுப்பி விட்டனர். ஆனால், மகனுக்கு நடக்க முடியவில்லை. அதனால் மகனை காத்தான்குடியிலுள்ள தனியார் மருத்துவ நிலையமொன்றுக்கு அழைத்துச் சென்று வைத்தியர் ஒருவரிடம் காட்டினோம். அவர் மருந்து வழங்கினார். அதைப் பாவித்த போதும் மகனுக்கு குணமாகவில்லை. இதன் பிறகு நீலாவணையிலுள்ள பாரம்பரிய முறிவு வைத்தியர் ஒருவரிடம் கொண்டு சென்றபோது, பிள்ளையின் முழங்கால் சில்லில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சதை நொறுங்கியுள்ளதாகவும் கூறி – பத்து போட்டுள்ளார்” என மாணவனின் தாயார் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, அந்த மாணவனை தான் தாக்கவேயில்லை என்கிறார் ஆசிரியர் பஹாரி.

மாணவன் மற்றும் அவரின் குடும்பத்தாரின் குற்றச்சாட்டு குறித்து ஆசிரியரைத் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் இந்தப் பதிலை வழங்கினார். குறித்த மாணவனின் பக்கத்து வகுப்பில் தான் கற்பித்துக் கொண்டிருந்தாகவும், சம்பந்தப்பட்ட மாணவனின் வகுப்பில் மாணவர்கள் குழப்படி செய்தமையினால் அவர்களை அதிபரிடம் செல்வதற்கு தான் அழைத்த போது, மாணவன் ஹாதிக் தவறான வார்த்தைகளைக் கூறி, முடியாது எனச் சொன்னதாகவும் ஆசிரியர் பஹாரி தெரிவித்தார்.

“இதன் போது அந்த மாணவனின் சேட்டில் எனது விரல் தவறுதலாகப் பட்டதால், அவரின் சேர்ட் பொத்தான்கள் அறுந்து விட்டன. வேறு அவரை நான் தாக்கவில்லை” எனவும் குறிப்பிட்டார். ஹாதிக் எனும் மேற்படி மாணவனின் பெரியப்பா மற்றும் அவரின் மகன்மார் இந்தப் பாடசாலை நிர்வாகத்துடன் சில காலங்களுக்கு முன்னர் பிரச்சினைப்பட்டதாகவும், அது குறித்து அவர்களுக்கு எதிராக அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறும் ஆசிரியர் பஹாரி, அதற்குப் பழி வாங்குவதற்கான சந்தர்ப்பமாக தற்போதைய விடயத்தை மாணவன் ஹாதிக்கின் குடும்பத்தினர் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், ஹாதிக் எனும் மாணவனின் பெரியப்பா குடும்பத்தினர் பாடசாலை நிர்வாகத்துடன் பிரச்சினைப்பட்ட சம்பவம் நடக்கும் போது, இந்தப் பாடசாலையில் தான் கடமையாற்றவில்லை என்றும், அதற்கு சில காலத்துக்குப் பின்னரே தான் இந்தப் பாடசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புள்ளவில் இன்று...

சர்வதேச தரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் கடைசி உலகப் போர் – கிளிம்ப்ஸ் வீடியோ

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான...

ஜப்பானில் அனுர..

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க...