கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, கடந்த ஆண்டில் மட்டும் 1,854 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றுள்ளார்.
தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் பிரபல தேடுதளமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். அண்மையில் ஆல்பபெட் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தான், சுந்தர் பிச்சையின் ஆண்டு ஊதியம் 1,854 கோடி ரூபாய் என்பதும், அதன்படி அவர் ஒவ்வொரு மாதம் சராசரியாக 154 கோடி ரூபாய் ஊதியமாக பெற்ற தகவலும் வெளியாகியுள்ளது. சுந்தர் பிச்சையின் ஊதியம், அந்நிறுவனத்தில் பணியாற்றும் சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிகமாகும்.
தனது ஊதியத்தில் 1,788 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக சுந்தர் பிச்சை பெற்றுள்ளார். அதாவது நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததற்காக இந்த தொகையானது வழங்கப்பட்டுள்ளது. நிதிச்சுமையை குறைப்பதற்காக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட சூழலில், சுந்தர் பிச்சைக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ள பெருந்தொகை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.