சூடானில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, அங்கு தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த குழுவினர் நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, அவர்களை வரவேற்க வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்பில், சவுதி அரசாங்கத்தின் ஆதரவுடன், குறித்த தரப்பினர் மீட்கப்பட்டுள்ளனர்.
சூடான் இராணுவத்தினருக்கும் அந்நாட்டு துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமான சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூடானில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் இரண்டாவது குழு சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இரண்டாவது குழுவில் 6 இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சூடான் துணை இராணுவத்திற்கும் மற்றும் சூடான் இராணுவத்துக்கும் இடையே மோதல் கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்று வருகின்றது.
பல சந்தர்ப்பங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் மோதல்கள் தொடர்கின்றன.
வன்முறை மோதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 4000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.