ஜப்பானில் மக்கள் தொகை கடும் சரிவை சந்தித்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்தாண்டு 8 லட்சம் பேர் மட்டுமே புதிதாக பிறந்துள்ளனர். இது சுமார் 125 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைவான பிறப்பு விகிதமாகும். மக்கள் தொகை சரிவு அந்நாட்டில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. அதன் நீட்சியாக தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் மாவட்டங்களில் யாருமே போட்டியிட முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதே போன்று 565 தொகுதிகளில் தலா ஒருவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். மக்கள் தொகை வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்காலிகமாக தொகுதி மறுசீரமைப்பு பணியில் ஈடுபட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டின் பொருளாதார சூழல், குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு என பல்வேறு காரணங்கள் பிறப்பு விகிதம் குறைவுக்கு காரணமாக கருதப்படுகிறது. இதனிடையே 30 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மேற்கொண்ட கருத்து கணிப்பில், 50 சதவீதம் பேர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தனிக்குழு அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புமியோ கிஷிடா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.