அசாமில் பள்ளிக்கு வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான புதிய ஆடை கட்டுப்பாடுகளை பள்ளி கல்வி துறை இன்று அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பில், ஆசிரியர், ஆசிரியைகள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெகிங்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனை பொதுமக்கள் அதிகளவில் ஏற்று கொள்ளவில்லை என அதற்கு விளக்கமும் அளித்து உள்ளது. அந்த அறிக்கையில், கல்வி நிலையங்களில் பணிபுரியும் சில ஆசிரியர், ஆசிரியைகள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிகின்றனர் என எங்களின் கவனத்திற்கு வந்தது.
பெருமளவிலான மக்கள் ஏற்று கொள்ள கூடிய ஒன்றாக அவை இல்லை. ஆசிரியர்கள் பணியின்போது, அனைத்து வகையிலும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேணடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களது ஆடை கட்டுப்பாடானது, நல்லொழுக்கம், நாகரீகம், தொழில் சார்ந்த விதம் மற்றும் பணியிடத்திற்கு ஏற்ற தீவிர நோக்கங்களை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதனால், மேற்கூறிய விசயங்களை கவனத்தில் கொண்டு, அனைத்து கல்வி நிலையங்களை சார்ந்த ஆசிரியர், ஆசிரியைகளும் பின்வரும் ஆடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளி கல்வி துறையானது கேட்டு கொண்டு உள்ளது.
இதன்படி, ஆசிரியர், ஆசிரியைகள் என்ன வகையான ஆடைகளை அணியலாம். எவற்றை அணிய கூடாது என அறிவித்து உள்ளது. ஆசிரியர்கள் பேண்ட், சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். (டி-சர்ட், ஜீன்ஸ் உள்ளிட்டவை கூடாது). ஆசிரியைகள் சல்வார், சேலை ஆகியவற்றை அணிந்து பணிக்கு வரவேண்டும். (டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் லெகிங்ஸ் உள்ளிட்டவை அணிந்து வர கூடாது).
ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் என இருவரும் தூய்மையான, உடலை அதிகம் மூடும்படியான மற்றும் கண்ணியமிக்க ஆடைகளை, பளிச்சென்று தெரியாத வண்ணத்தில் அணிந்து வரவேண்டும்.
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடிய ஆடைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளது. இந்த அறிக்கையின் விசயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மீறினால் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.