மேல் மாகாணத்திற்குள் அலுவலகங்கள் மற்றும் ஏனைய வளாகங்களை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வார நாட்களின் திங்கட்கிழமைகளில் தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், (பல்கலைக்கழகங்கள் / பிரிவேனாக்கள்) ஆகிய இடங்களின் சோதனையிடப்படவுள்ளது.
செவ்வாய்கிழமைகளில் தொழிற்சாலைகளும் புதன் கிழமைகளில் வேலைத்தளங்களிலும், வியாழக்கிழமைகளில் ஏனைய தனியார் நிறுவனங்களிலும், வௌ்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களிலும், சனி கிழமைகளில் வீடுகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை அண்மித்த பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிப்பாட்டுத் தலங்களிலும் சோதனையிடப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட டெங்கு ஒழிப்புக்கான நிபுணர்கள் குழுவின் மேல் மாகாணத்திற்கான உப குழு அண்மையில் கூடியபோது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைய இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதேபோல் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு மேலதிக நாட்கள் அவசியப்படும் பட்சத்தில் அது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாராந்த சோதனையிடலின் போது தெரிவு செய்யப்படும் தொண்டர் குழுக்கள் ஊடாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மாதாந்தம் அறிக்கைகளை சமர்பிக்க வேண்டியது அவசியமாகும்.
தொடர்ச்சியாக பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் வகையில் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து ஆரம்ப வகுப்பு மற்றும் ஏனைய மாணவர்களை பாதுகாக்கும் வகையில் பெற்றோர்களுக்கு மேலதிக செலவீனங்களை ஏற்படுத்தாதவாறு பொருத்தமான ஆடைகளை அணிவிப்பதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.