மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் டைட்டானிக் கப்பல் வடிவிலான கனவு இல்லத்தை மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கட்டி வருகிறார்.
மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மிண்டு ராய்(52) 3 மாடிகள் கொண்ட டைட்டானிக் கப்பல் வடிவிலான கனவு இல்லத்தை கட்டி அசத்தி வருகிறார்.
இவர் கொல்கத்தாவில் வாழ்ந்து வந்த போதே, கப்பல் வடிவிலான வீட்டை கட்ட வேண்டும் என்று கனவுடன் இருந்துள்ளார்.
இதற்காக பல்வேறு பொறியாளர்களை அவர் அணுகியும், யாரும் அதற்கு ஒத்து வராத நிலையில், தனது கட்டுமான அனுபவத்தை வைத்து தானே களத்தில் இறங்கி அவரது கனவு இல்லத்தை 2010ம் ஆண்டு கட்டத் தொடங்கி உள்ளார்.
ஆனால் கட்டிட பணி தொடங்கிய சிறிது காலத்திலேயே அவருக்கு பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் நேபாளத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டுமான வேலை செய்ய மீண்டு ராய் சென்றுள்ளார், அதில் கிடைத்த பணம் மற்றும் அனுபவத்தை கொண்டு அவர் மீண்டும் அவரது கனவு இல்லத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.
மீண்டு ராயின் கனவு கப்பல் இல்லம் 39 அடி நீளமும் 13 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்டுள்ளது. மீண்டு ராயின் வீடு தற்போது அந்த பகுதியின் முக்கியமான சுற்றுலா தளமாக மாறியுள்ளது.
இந்த டைட்டானிக் கப்பல் வடிவிலான வீட்டிற்கு சுமார் 15 லட்சம் வரை செலவு செய்து இருக்கும் நிலையில், மீண்டு ராய் வீட்டுக்கு அவரது தாயின் பெயரை வைத்துள்ளார்.
கட்டிடப் பணிகளை அடுத்த வருடம் முடிக்க திட்டமிட்டு இருக்கும் மீண்டு ராய், இந்த வீட்டின் மேல் தளத்தில் உணவகம் ஒன்றை அமைத்து அதன் மூலம் வருமானம் ஈட்ட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.