அமெரிக்க அதிபராக 2017-ம் ஆண்டு பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் 2021-ம் ஆண்டு அதிபராக நீடித்தார். ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தவரையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அவருடைய செயல்பாடுகளாலும் பேச்சுகளாலும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திவந்தார். அதிபராக இருந்தாலும் கூட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகி வந்தார்.
2016 அதிபர் தேர்தலுக்கு முன்பு, `ட்ரம்ப் தன்னுடன் ரகசிய உறவில் இருந்தார்’ என்று அமெரிக்காவின் பிரபல ஆபாச நடிகை ஸ்ட்ராமி டேனியல்ஸ் கூறியிருந்தார். அதனை மறைக்க தனக்கு, அவரின் வழக்கறிஞர் மூலமாக 1,30,000 அமெரிக்க டாலர்கள் லஞ்சமாக கொடுத்தார் என்று ஸ்ட்ராமி டேனியல்ஸ் கூறியிருந்தார்.இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்டரீதியிலான செலவு என்று பதிவு செய்யப்பட்டது என்பது தான் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு.
சட்டவிரோதமாக கணக்கில் வராத 1,30,000 அமெரிக்க டாலர் பணம் வழங்கியது தொடர்பாக ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் அட்டர்னி ஜெனரல் (அரசு வழக்கறிஞர்) ஆல்வின் பிராக் ஓராண்டாக விசாரணை நடத்தினார். பின்னர் கடந்த 30-ம் திகதி மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி (மக்கள் நீதிமன்றம்) விசாரணை நடத்தியது. அப்போது ட்ரம்ப் மீது தேர்தல் பிரச்சார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்ய கிராண்ட் ஜூரி உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்படி அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவில் இது முக்கிய கிரிமினல் வழக்காக கருதப்படுகிறது. இந்த வழக்கில் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காகத்தான் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் டொனால்ட் ட்ரம்ப் சரண்டரானார். அதனையடுத்து, ட்ரம்ப் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் தான் குற்றவாளி இல்லை என்று ட்ரம்ப் வாதிட்டார். பின்னர், எந்த நிபந்தனையுமின்றி ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 6, 2021ம் ஆண்டு ட்ரம்பின் உரைக்குப் பின்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் சேர்த்து 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் ட்ரம்பின் மீது வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.