நகைச்சுவை படத்தை வசனத்தில் மெறுகேற்றி அரசியல் படமாக்கிய சம்பவம்!

Date:

முல்லப்புடி வெங்கட ரமணா எழுதிய கதையை அதுர்த்தி சுப்பாராவ் 1964 இல் டாகுடு மூத்தடு என்ற பெயரில் இயக்கினார். என்.டி.ராமராவ் நடித்த இந்தப் படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. 1966 இல் இதனை அவன் பித்தனா? என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். ரீமேக்கின் திரைக்கதை, வசனத்தை எழுதும் பொறுப்பு கலைஞர் மு.கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது எழுத்தில் தெலுங்கின் நகைச்சுவைப் படம் சமூக விமர்சனத்தை முன்வைத்த அரசியல் படமானது.

நல்லையா ஒரு கோடீஸ்வரர். அவரது மகன் கலப்புத் திருமணம் செய்து கொள்ள, நல்லையா அவனை வீட்டைவிட்டு துரத்திவிடுவார். மகனும் அவனது மனைவியும் இறந்து போக, நல்ல உள்ளம் கொண்ட ஒரு டீக்கடைக்காரர் அனாதையான அவர்களது மகனை எடுத்து வளர்ப்பார். நல்லையா மனம் மாறி மகனைத் தேடி வருகையில் மகனும், மருமகளும் இறந்துபோயிருக்க, பேரன் எங்கிருக்கிறான் என்பதே தெரியாமல் போய்விடும். அந்தக் கவலையே அவரை நோயில் தள்ளிவிடும். பேரனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்பதே அவரது ஒரே விருப்பமாக இருக்கும். அனாதையான பேரனை டீக்கடைக்காரர் குமார் என பெயரிட்டு, தனது மகனைப் போல வளர்ப்பார்.

குமார் இப்போது வாலிபன். அவன்தான் இப்போது கடையை நடத்துவது. தொழிலாளர்கள் காசு இல்லாமல் சாப்பிட்டாலும் கண்டு கொள்ளாத நல்ல உள்ளக்காரன். பசிக்கிறப்ப சாப்பிடு, காசிருக்கிறப்போ குடுத்திடு என்பதே அவன் பாலிசி. நாலைந்து பெண் குழந்தைகளைவேறு அவனது பராமரிப்பில் வளரும். அவர்களுடன் ஒருத்தியாக கோமதியும் வந்து சேர்ந்து கொள்வாள். அப்பாவின் பணத்தாசைக்காக கிழவனுக்கு மூன்றாம்தாரமாக கழுத்தை நீட்ட விருப்பமில்லாமல் அவள் ஓடி வந்திருப்பாள். அவளுக்கு நல்லையாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு கிடைக்கும். நல்லையா எப்போது சாவார் சொத்தை எப்போடு ஆட்டையப் போடலாம் என்று சொந்தக்கார காக்கா கூட்டம் ஒன்றும் அவரது பங்களாவில் இருக்கும். குமாரின் வெளிப்படையான குணம் நல்லையாவுக்குப் பிடித்துப்போகும். ஒருகட்டத்தில் அவன்தான் தனது பேரன் என்பதை அறிந்து கொள்வார். நல்லையா பேரன் கிடைத்த மகிழ்ச்சியில் மண்டையைப் போட குமாரையும், கோமதியையும் பிரிக்க காக்கா கூட்டம் சதி செய்யும். கடைசியில் குமாரை பைத்தியக்காரன் என மனநலவிடுதியில் சேர்க்கும். பராசக்தி போல் கிளைமாக்ஸ் கோர்ட்டில் நடக்கும். அதுதான் படத்தின் ஹைலைட் காட்சி.

படம் வெளியானதற்கு அடுத்த வருடம் நடந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை வென்று முதல்முறை ஆட்சிக்கட்டிலில் ஏறியது. அதற்கு முன்பே படத்தின் நாயகன், குமாராக நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். வசனம் எழுதியவர் கருணாநிதி. அரசியல் பன்சுக்கு கேட்கவா வேண்டும். நல்ல உள்ளம் கொண்ட அந்த டீக்கடைக்காரரின் பெயர் அழகிரி. பட்டுக்கோட்டை அழகிரியை மனதில் வைத்து அந்தப் பெயரை கொடுத்திருந்தார். ரோஜா குறித்து பேச்சு வருகையில் நாயகன் சொல்வான், எனக்கு ரோஜா என்றாலே நினைவுக்கு வருவது நேருதான். இப்படி கிடைக்கிற சந்திலெல்லாம் அரசியல் சிந்து பாடியது அவன் பித்தனா.

கோமதியாக நடித்த சி.ஆர்.விஜயகுமாரி நாயகி. அவரை ஒருவன் சைட் அடிக்க, நாயகன் அவனை, என்னடா ஐப்பசி என்பார். என்ன ஐப்பசியா? ஆமா, ஐ ன்னா கண்ணு. உன் கண்ணுக்கு ரொம்ப பசிபோல… இப்படி வசனங்களில் விளையாடியிருப்பார். கிளைமாக்சில் நாயகனுக்கு எதிராக சாட்சி சொல்கிறவர்கள் அனைவரும் அவனால் பலனடைந்தவர்கள். பசிக்கிறப்ப சாப்பிடு, காசிருக்கிறப்ப கடனை அடைன்னு பைத்தியக்காரன்தானே சார் சொல்வான்… கோயில் உண்டியல்ல காசா கொட்டுவாங்க. பிச்சைக்காரங்க ஐயா அம்மான்னா அஞ்சு பைசா போட மாட்டாங்க. இந்தாளு நூறு ரூபா தந்தான்னா, அவன் பைத்தியம்தானே… மில்லுல வர்ற லாபத்துல சரிபாதி தொழிலாளர்கள் எங்களுக்கு தர்றதா சொன்னார். பைத்தியக்காரன்தானே அப்படி செய்வான்… இப்படி நாயகனின் நல்ல உள்ளமே பைத்தியக்காரத்தனமாகப் பார்க்கப்படும். நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்கிற கான்செப்ட்தான். அதனை தனது வசனத்தால் கருணாநிதி பிரித்து மேய்ந்திருப்பார். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இயல்பான காட்டாறு நடிப்பும், வசன உச்சரிப்பும் அருமை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...