பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸ் தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இதில் சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான், அனுமன் வேடத்தில் தேவதத்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் ராவத் டைரக்டு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் தயாராகி உள்ளது.
திருப்பதியில் நடந்த நிகழ்ச்சியில் படம் குறித்து பிரபாஸ் பேசும்போது, “ஆதிபுருஷ் படத்தை சினிமா என்று சொல்லக்கூடாது. இது ராமாயணம். இந்த படத்தில் நடித்தது எனது அதிர்ஷ்டம்.
ராமர் அனைத்து மக்களின் இதயத்திலும் இருக்கிறார். அப்படிப்பட்ட மகானாக நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை கடவுளின் அருளாக நினைக்கிறேன். இந்தப் படம் குறித்து அறிவிப்பு வந்தபோது நடிகர் சிரஞ்சீவி நீ ராமராக நடிக்கிறாயா என்று கேட்டார்.
ஆமாம் சார் என்று சொன்னேன். அது உண்மையில் அதிர்ஷ்டம். அனைவருக்கும் கிடைக்காது. உனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லி பாராட்டினார். ஆண்டுக்கு இனி இரண்டு மூன்று படங்களில் நடிப்பேன்” என்று கூறினார்.
திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பியதும் திருமணமா? எப்போது செய்து கொண்டாலும் திருப்பதியிலேயே செய்து கொள்கிறேன் என்று சிரித்தபடி பிரபாஸ் பதில் அளித்தார்.