சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாரி, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
பின்னர் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசித்ரா கம்போஜ் பேசும்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதி கூறிய அற்பமான, அடிப்படையற்ற மற்றும் அரசியல் நோக்கத்துடன் கூடிய கருத்துக்களை நிராகரிக்கிறேன்.
இத்தகைய தீங்கிழைக்கும் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் பதிலளிப்பதற்கு கூட தகுதியற்றது.
மாறாக, நமது கவனம் எப்போதும் நேர்மறையாக முன்னோக்கிய பார்வையில் இருக்க வேண்டும். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த இன்றைய விவாதம் மிகவும் முக்கியமானது. விவாதத்தின் தலைப்பை நாங்கள் மதிக்கிறோம்.
எனவே, எங்கள் கவனம் இந்த தலைப்பில் மட்டுமே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கி அழித்தன.
இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.