பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக அந்த நாட்டின் துறைமுக நகரமான கராச்சியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அந்த வழியில் வந்த 2 மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி, சோதனையிட முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் இருந்த 3 பயங்கரவாதிகள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டனர். இதற்கு பதிலடியாக போலீசாரும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.