பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வயதாக இருக்கிறது. அதாவது பாலியல் உறவுக்கு இந்த வயதைக் கடந்தவர்கள் சம்மதிப்பது மட்டுமே சட்டப்பூர்வமாகக் கருதப்படும்.
உதாரணத்திற்கு ஒரு நாட்டில் சட்டப்பூர்வ வயது 17ஆக இருக்கிறது என்றால், அதற்குக் கீழ் உள்ளவர்கள் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது பலாத்காரமாகவே கருதப்படும்.
இதுவரை உலகிலேயே ஜப்பான் நாட்டில் தான் சட்டப்பூர்வ ஒப்புதல் வயது மிகக் குறைவாக இருந்தது. பிரிட்டனில் 16ஆக உள்ளது. பிரான்சில் 15ஆகவும் ஜெர்மனி மற்றும் சீனாவில் 14ஆகவும் இருக்கிறது. ஜப்பான் நாட்டில் கடந்த 1907 முதல் சட்டப்பூர்வ வயது 13ஆகவே இருந்து வந்தது.
தற்போது அது 16ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கு ஜப்பான் நாடாளுமன்றம் சமீபத்தில் தான் ஒப்புதல் அளித்தது. இதில் பாலியல் சார்ந்த குற்றங்கள் குறித்துப் பல சீர்திருத்தங்களும் இடம் பெற்றுள்ளன.
பலாத்கார வழக்குகளின் விசாரணை உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் போராடி வரும் நபர்கள் இந்த சீர்திருத்தங்களைப் பாராட்டியுள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிராகப் பெரியவர்கள் நடத்தும் பாலியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதில் இது பெரிய பங்கு வகிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.