முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பால், பழங்குடி கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் முகாமில், குட்டி யானைகள், பாகன் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம், சமீபத்தில், உலகின் மிக உயரிய, ‘ஆஸ்கார்’ விருது பெற்றது.
கர்நாடகா வரும் பிரதமர் மோடி, இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற, பாகன் தம்பதியான பொம்மன் – பெல்லியை முதுமலையில் சந்தித்து பாராட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பிரதமர் வருகையை எதிர்பார்த்து, முதுமலையில் அதிகாரிகள் ஆயத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெப்பக்காட்டை ஒட்டிய யானைபாடி, லைட்பாடி, தெக்குபாடி ஆகிய பழங்குடி கிராமங்களில் நடைபாதை அமைப்பது, வீடுகள், கழிப்பறைகள் சீரமைத்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடக்கின்றன. பாகன் பொம்மன், பெல்லி தம்பதி வீடு, அதை சுற்றியுள்ள வீடுகளும் சீரமைக்கப்படுகின்றன.