சீன அரசாங்கத்தினால் இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (9) மன்னார் தாழ்வுபாடு மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய எரிபொருள் வழங்கும் நடவடிக்கையில் சிக்கல் இடம் பெற்றுள்ளதாக தாழ்வுபாடு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நகர் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (9) காலை 9.மணி முதல் மாலை 4.மணி வரை மண்ணெண்ணை வழங்கப்பட்டது.
அதில் நீல நிற அட்டைகளுக்கு மாத்திரம் எண்ணெய் வழங்கப்பட்டது.
தற்காலிக புத்தகமான வெள்ளை நிற புத்தகத்திற்கு மானிய எண்ணெய் வழங்கப்படவில்லை.
இந்த இரு புத்தகங்களும் கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.
இவ்வாறு வெள்ளை நிற புத்தகம் வைத்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கான மானிய எரிபொருள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே உரிய பதிவுகளை கொண்டுள்ள ஏனைய மீனவர்களுக்கும் மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்க மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.