பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் மரக்கறிகளின் வரவு அதிகரிப்பு மற்றும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் மரக்கறி தொகைகள் பெறப்பட்டதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளன.
இதன்படி, 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 100 ரூபாவாகவும், 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கறி மிளகாய் ஒரு கிலோகிராம் 250 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 450 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவாவின் விலை 300 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, பண்டாரவளை மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறி தொகை அதிகரிப்புடன் அதன் விலைகளும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோ கோவா 20 முதல் 25 ரூபாய் வரையிலும், போஞ்சி ஒரு கிலோகிராம் 80 முதல் 100 ரூபாய் வரையிலும், தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் குறைந்துள்ளன.
மலையகம் மற்றும் தாழ்நிலங்களில் இருந்து காய்கறி வரவு அதிகரித்ததே இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் மரக்கறிகள், பழங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை வீதியின் இருபுறங்களிலும் விற்பனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.