மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்த நிலையில், ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில் இன்றைய அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதன்படி விரைவில் பணி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், நுவரெலியா மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி, வசந்தகால பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இன்றைய தினம் ஆராயப்பட்டுள்ளது.