ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து 1996-ல் திரைக்கு வந்த இந்தியன் படம் வெற்றி பெற்றதால் 27 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தியன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதில் இருந்து விபத்து, தயாரிப்பாளர்-டைரக்டர் மோதல், வழக்கு என்றெல்லாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தினர். சமீபத்தில் வெளிநாடு சென்றும் முக்கிய காட்சிகளை படமாக்கி விட்டு வந்தனர்.
அதன்பிறகு ஷங்கர் தெலுங்கில் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை எடுக்க சென்று விட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வந்தது.
நேற்று முன்தினம் கிளைமாக்ஸ் காட்சியுடன் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டதாகவும் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கப்போகிறேன் என்றும் ஷங்கர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று முதல் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் கமல்ஹாசனுடன் சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தியன் 2 தீபாவளிக்கு வருமா? அல்லது பொங்கல் பண்டிகையில் ரிலீசாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.