யாழ்ப்பாணம் – இருபாலை பகுதியில் அனுமதியின்றி நடத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அவர்கள், சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஊடாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உரிய வகையிலான பராமரிப்பு மற்றும் வசதிகள் அந்த சிறுவர் இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து குறித்த சிறுவர் நிலையம் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் தெரிவித்தார்.