மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயிலில் இருந்த பையொன்றை ரயில் பாதுகாப்புப் பிரிவினர் சோதனையிட்டதில் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட நகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கண்டி, கட்டுகஸ்தோட்டை குஹாகொட பகுதியைச் சேர்ந்த லக்சிறி சம்பத் மற்றும் அவரது மனைவி ஹிருணி நிமாஷா ஆகியோரே ரயிலில் இந்த பையை மறந்து சென்றுள்ளனர்.
ஹிருணியின் கிராமம் மாத்தறை பகுதியில் உள்ளதால், தம்பதியினர் கண்டியிலிருந்து அவரது வீட்டிற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் கண்டிக்கு இந்த ரயிலில் பயணித்துள்ளனர்.
இந்த பயணத்தில் மனைவியின் தாய் தந்தையும் இருந்துள்ளனர்.
ரயிலில் அமர்ந்திருந்த போது அவர்களது பயணப் பைகள் சில இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டு கோட்டையிலிருந்து இறங்கும் போது பையை எடுக்க மறந்து விட்டனர்.
கோட்டைக்கு வந்த ரயிலை மாளிகாவத்தை தரிப்பிடத்தில் இடுவதற்கு முன்னர் அதனை சோதனையிட்ட போதே பயணப்பையை பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
பின்னர் அதனை மாளிகாவத்தை ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அந்த பையில், 3 பவுன் தங்க மாலை , பிரேஸ்லெட், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன், 35 லட்சம் ரூபாய் சேமிப்பு சான்றிதழ், வங்கி புத்தகங்கள், கார் உரிமம் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.
ரயில் பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் காமினி திஸாநாயக்கவின் தலையீட்டில் இந்த பையின் உரிமையாளரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைவாக அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் செய்தி வழங்கப்பட்டது.
இதற்கிடையில், பையில் இருந்த வங்கிப் புத்தகத்தின் முகவரியைக் வைத்து உதவிப் பாதுகாப்பு அதிகாரி சுமித் ஊடாக மாத்தறை பலடுவ பிரதேசத்திலுள்ள முகவரி கண்டுபிடிக்கப்பட்டு தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.