டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி கடந்த செவ்வாய் கிழமை ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் புறப்பட்டு சென்றது.
விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். நடுவானில் திடீரென விமான என்ஜின்களில் ஒன்று பழுதடைந்து உள்ளது. இதனால், ரஷியாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானத்தில், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் என பயணித்த அனைவரையும் பஸ்களில் அழைத்து சென்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்க வைத்தனர். ரஷியாவில் ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு போதிய அளவில் வசதிகள் கிடைக்கப்பெறவில்லை என கூறப்பட்டது.
கல்லூரியில் தங்கியவர்களுக்கு பெரும்பாலும் கடல் உணவே கிடைத்தது. சிலர் ரொட்டியும், சூப்பும் மட்டுமே சாப்பிட்டு உள்ளனர்.
முதியவர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை. பள்ளியில் தங்க வைக்கப்பட்ட பயணிகள், தரையில் விரிப்பை விரித்து ஒரே அறையில், 20 பேர் என்ற கணக்கில் படுத்து உள்ளனர். சரியான உணவு வசதி இல்லை. அவர்களுக்கு கோக் மற்றும் ரொட்டி அளிக்கப்பட்டது என பயணி ஒருவர் கூறினார்.
ரஷியாவில் மற்றவர்களிடம் பேசுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆனால், அந்நாட்டு அதிகாரிகள் நல்ல முறையில் நடந்து கொண்டனர் என கூறினார். எனினும், கல்லூரியில் தங்கிய பயணிகளுக்கு வைபை வசதி அளிக்கப்பட்டது.
இதனால், அவர்கள் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினர். மும்பையில் இருந்து மாற்று விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்படும். அந்த விமானத்தில் மகதன் நகரில் இருந்து பயணிகள் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என ஏர் இந்திய விமான நிறுவனம் கூறியது.
வேறொரு விமானம் வருவதற்கும், தரையிறங்குவதற்கும் ரஷிய விமான போக்குவரத்து கழகம் அனுமதி அளித்தது. இதன்படி, மும்பையில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ.ஐ.173டி எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட்டு மகதன் நகருக்கு சென்றது.
அதன்பின்னர், 2 நாட்களாக பரிதவித்த பயணிகளை ஏற்றி கொண்டு, இன்று காலை 10.27 மணியளவில் அமெரிக்காவுக்கு புறப்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இன்று மதியம் 12.07 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
எங்களுடைய பயணிகள் அனைவருக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு உள்ளன. வேண்டிய பிற வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன என ஏர் இந்தியா டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.
அரசு அமைப்புகள், ஒழுங்குமுறை ஆணையங்கள், தங்களுடைய பணியாளர்கள் உள்பட, விமான பயணிகளை சான் பிரான்சிஸ்கோவுக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்து கொண்டது.
#UPDATE | Flight AI173D landed safely in San Francisco (SFO) at 0007 hours on 08 June 2023 (local time). All our passengers are being extended maximum on-ground assistance with clearance formalities and provided other necessary support. Air India thanks government agencies,… pic.twitter.com/9faNPVzXv9
— ANI (@ANI) June 8, 2023