உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 432-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இதனிடையே, ரஷியாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டுமென உக்ரைன் வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் உக்ரைன் எடுத்து வருகிறது. ஆனால், ரஷியாவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், 2023-ம் ஆண்டு உலக ஜூடோ சாம்பியன்ஷிப் தொடர் மே 7 முதல் 14 வரை தோஹாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் அணிகளுக்கு இந்த தொடர் முக்கியமானதாக உள்ளது. தொஹாவில் நடைபெறும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் தொடரில் ரஷியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரஷிய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். ஜூடோ சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து உக்ரைன் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் ரஷிய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.