இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில உள்ள மக்களுக்கான சுத்தமான கிணறுகளை பராமரித்தல் மற்றும் விவசாயத்துறைக்கு உதவும் நோக்கில், இங்கிலாந்தின் சொலிஹூல் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து 58 ஆயிரம் பவுண்ட் நிதியை திரட்டியுள்ளனர்.
குறித்த நிதி தொகையை, இரண்டு தொண்டு நிறுவனங்கள் ஊடாக இலங்கை மக்களுக்கான ‘சுத்தமான கிணறுகள்’ என்ற திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளதாக இங்கிலாந்தின் சொலிஹூல் கல்லூரி அறிவித்துள்ளது.
குறித்த நிதி, 50 கிலோமீற்றர் மலையேற்றம் உட்பட்ட நடைப்பயணத்தின் மூலம் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சொலிஹூல் பிரெப் கல்லூரியின் தலைவர் மார்க் பென்னி தலைமையிலான குழுவினால் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சனிக்கிழமையன்று இந்த நிதித்திரட்டும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஒரே நாளில் பெருந்தொகையான நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தூய்மையான நீர் கிணறுகளை உருவாக்கவும், மரக்கறி விதை பொதிகளை வழங்கவும், நிலையான உற்பத்திக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த செயல்திட்டங்களை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் சொலிஹூல் கல்லூரி அறிவித்துள்ளது.
முன்னரும் பல ஆண்டுகளாக, இலங்கையின் ஏழ்மையான பகுதிகளில் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு சொலிஹூல் கல்லூரி தமது நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.