சித்திரை 1ஆம் திகதி தமிழ் புத்தாண்டிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் எம்.பி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தமிழ் மாதங்களில் முத்திரைப் பதிக்கும் முதல் மாதமான சித்திரை மாதத்தை தமிழ் புத்தாண்டின் தொடக்கமாக தமிழர்கள் கொண்டாடுவது பெருமைமிக்கது. நாளை பிறக்கும் தமிழ் புத்தாண்டை வரவேற்று, கொண்டாடி, மகிழ்வுடன் வாழ வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், நாடு முழுவதும் உள்ள தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் சித்திரை மாதம் முதல் நாள் அன்று புதிய ஆண்டில் அடி எடுத்து வைப்பதன் மூலம் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும். இப்புதிய ஆண்டின் முதல் நாளில் இறைவனை வழிபட்டு, உபசரித்து உதவுவது, உற்றார் உறவினர்களோடு அன்பைப் பரிமாறிக்கொள்வது சிறப்புக்குரியது.
தமிழர்கள் கடந்தகால துன்பங்கள், துயரங்கள், இழப்புகள் ஆகியவற்றில் இருந்து மீளவும், இனி வரும் காலம் அவர்களுக்கு நன்மைகள் நிறைந்த காலமாக அமையவும் புதிய ஆண்டு வழி காட்டட்டும். “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” நம் தமிழ் இனம் என்பது உலகத் தமிழர்களுக்கு பெருமை. அத்தகைய புகழ் மிக்க தமிழ் இனம் சித்திரையில் புத்தாண்டை கொண்டாடுவதன் மூலம் அவர்களுக்கு வருங்காலம் வசந்த காலமாக அமையட்டும்.
தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் வரும் காலங்களிலும் பறைசாற்றப்பட இந்த ஆண்டின் புத்தாண்டும் வழி கோல வேண்டும். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமை, உழைப்பு, நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் வளமான தமிழகம் அமைந்து, அடுத்த தலைமுறையினர்
நல்வழியில், வெற்றிப்பாதையில் பயணிக்க வேண்டும்.
பிறக்கும் தனித்துவமான, அர்த்தமுள்ள தமிழ் புத்தாண்டு தமிழர்களின் வாழ்வில் புத்தொளி ஏற்றவும், அவர்கள் வாழ்வில் வளமுடன், நலமுடன் வாழவும் இறைவன் துணை நிற்க வேண்டி, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.