விருதுநகர் மாவட்டம் வி.ராமலிங்கபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வபோது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்று பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்த போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பட்டாசு ஆலையில் வெடி தயாரிக்கும் அறையின் மீது மின்னல் தாக்கி வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 55 வயது பெண் தொழிலாளர் புஷ்பம் என்ற பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.