20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிந்தது.
சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப் 2-ல் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
சூப்பர்-8 சுற்று நாளை தொடங்குகிறது. இதில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
அந்த அணி பேட்டிங்கில் டி காக்,ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், கிளாசன், ஸ்டெப்ஸ், டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் நார்ஜே, ரபடா, மார்கோ ஜேனசன் ஆகியோர் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.
முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்கா அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. லீக் சுற்றில் பாகிஸ்தான், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் தோற்றது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து ஆனது.
அந்த அணியில் ஸ்டீவன் டெய்லர், ஆரோன் ஜோன்ஸ், ஆண்ட்ரிஸ் கவுஸ், மோனாத் பட்டேல், நிதிஷ்குமார், கோரி ஆண்டர்சன், அலிகான், சவுரவ் நேத்ராவல்கர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் ஆர்வத்தில் அமெரிக்கா உள்ளது.