மொரட்டுவ-சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்தனர்.
சயுருபுர வீட்டுத் தொகுதியின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த ரசிக சம்பத் மார்ட்டின் (24) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி மற்றும் பெற்றோரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, உயிரிழந்தவர் அதிகாலை 2 மணியளவில் மரண இல்லத்திற்குச் செல்வதற்காக கூறிவிட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இரவில் வீட்டிற்கு வரும்போது வீட்டிலுள்ளவர்களின் நித்திரைக்கு பாதகம் ஏற்படாதவாறு, மூன்றாவது மாடியின் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த தினம் வழக்கம் போல் ஜன்னல் வழியாக வீட்டுக்கு வரும்போது விபத்துக்குள்ளானாரா அல்லது அப்படி ஏதும் இல்லையென்றால் கொலையா என்பது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.