ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.
ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பிரப்சிம்ரன் சிங் 12 ரன், லியாம் லிவிங்ஸ்டோன் 15 ரன், ஜிதேஷ் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நெருக்கடிக்கு மத்தியிலும், சிறப்பாக ஆடி அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்த ஷிகர் தவான் 57 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷி தவான் 19 ரன்களிலும், சாம் கரன் 4 ரன்களிலும் அவுட் ஆகினர்.
கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ஷாருக்கான் 21 ரன்களும், ஹர்பிரீத் பிரார் 17 ரன்களும் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தினார். ஹரிஷ் ராணா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராணா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஆந்திரே ரசல் 42 ரன்களும், ராசன் ராய் 38 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களும் எடுத்தனர். இறுதியாக விளையாட வந்த ஷர்துல் தகூர் பூஜ்ஜியம் ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.