காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசும்போது, 52 வயதாகும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என மிகவும் வருத்தமாக பேசியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடைபெற்று வந்தது. 3 நாட்கள் நடந்த இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக மாநாட்டின் நிறைவு நாளான நேற்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல்
காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பாரத் ஜோடோ யாத்திரை துவங்கி பல்வேறு விஷயங்களை மனம்விட்டு பேசி இருந்ததோடு, 52 வயதாகும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என மிகவும் வருத்தமாக கூறி இருந்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி ‘‘ 1997 பொது தேர்தலுக்குப் பிறகு நாங்கள் இருந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. அந்த சூழ்நிலை எங்களுக்கு புதிதாக இருந்தது. நான் எனது அம்மாவிடம் போய் என்ன நடந்தது என்று கேட்டேன். அவர் நாம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றார். அதுவரையில் அந்த வீடு எங்கள் வீடுதான் என்று நான்
நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே எதற்காக நாம் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அம்மாவிடம் கேட்டேன்.
அப்போதுதான் எனது தாயார் இது நமது வீடு கிடையாது. இது அரசினுடையது என்றார்கள். அப்படியென்றால் அடுத்து நாம் எங்கே போவோம் என அம்மாவிடம் கேட்டேன். அம்மாவோ அதற்கு தெரியவில்லை என்றார். இப்போது எனக்கு வயது 52, இன்னும் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை. எங்கள் குடும்பம் உத்தரப் பிரதேச மாநிலம்,அலகாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளது. அதுவும் இப்போது எங்களுடையது வீடு அல்ல. நான் இப்போது துக்ளக் லேனில் 12-ம் எண் வீட்டில் வசித்தாலும், அதுவும் எனது சொந்த வீடு கிடையாது.
இதனால் தான் நான் பாரத் ஜோடோ யாத்திரைக்கு தயாரானபோது, யாத்திரையில் என்னை சந்திக்க வருபவர்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தர வேண்டும் என்று கட்சியினரிடம் கூறினேன். யாத்திரைதான் எங்கள் இல்லம். அதன் கதவு, ஏழை, பணக்காரன், விலங்குகள் என எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்காகவும் திறந்திருக்கும்” என ராகுல் காந்தி உருக்கமாக கூறியிருந்தார் .