உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்ட பந்தயம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.10 மணிக்கு நடைபெற்றது. தகுதி சுற்று மற்றும் அரைஇறுதி மூலம் டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் அமெரிக்காவை சேர்ந்த கேப்ரியல் தாமஸ் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 21.83 வினாடியில் கடந்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்ற செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட் 22. 08 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை பிரிட்டானி பிரவுன் 22.20 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.
பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் புதிய ஒலிம்பிக் சாதனை படைக்கப்பட்டது. பக்ரைனை சேர்ந்த வின்பிரட் யாவி பந்தய தூரத்தை 8 நிமிடம் 52.76 வினாடியில் கடந்து சாதனை படைத்து தங்கம் 2008-ம் ஆண்டு பெய்விங் ஒலிம்பிக் வென்றார்.
இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரஷியாவை சேர்ந்த ஹால்கினா 8 நிமிடம் 58.81 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு பக்ரைன் வீராங்கனை இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
பெருத்செமுடை (உகாண்டா) 8 நிமிடம் 53.34 வினாடியில் கடந்து வெள்ளியும், பெய்த் செரோட்டிச் 8 நிமிடம் 55.15 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கோள் ஹாக்கர் தங்கம் வென்றதோடு புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 27.65 வினாடியில் கடந்தார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நார்வேயை சேர்ந்த ஜேக்கப் இன்கேபிரிகிட்சன் 3 நிமிடம் 28.32 வினாடியில் கடந்தே சாதனையாக இருந்தது.
இங்கிலாந்தின் ஜோஷ் கெர் 3 நிமிடம் 27.69 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீரர் பாரெட் நுகுஸ் 3 நிமிடம் 27.80 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மில்டியாடிஸ் 8.48 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். ஜமைக்காவுக்கு வெள்ளியும் (வெய்ன் பின்னாக், 8.36 மீட்டர் தூரம்), இத்தாலிக்கு (புர்லானி, 8.34 மீட்டர் தூரம்) வெண்கலமும் கிடைத்தன.
பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் கனடா வீராங்கனை கேம்ரின் ரோஜர்ஸ் 76.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். அமெரிக்காவை சேர்ந்த எச்சிகுன்வோக் 75.48 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளியும், சீன வீராங்கனை ஜி ஜாவ் 74.37 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் கைப்பற்றினார்கள்.