வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது.
தொடக்க வீரர்கள் ரிக்கெல்டன் (4), ரீஸா ஹென்ட்ரிக்ஸ் (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த கேப்டன் மார்கிராமுமம் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
டிரஸ்டன் ஸ்டப்ஸ் 42 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். பாட்ரிக் க்ருகர் 32 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டு 3 விக்கெட்டும், ஷமர் ஜோசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அலிக் அதானஸ், ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதானஸ் 30 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்களும், ஷாய் ஹோப் 36 பந்தில் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 65 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் பூரன் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டியில் நாளை நள்ளிரவும், 3-வது போட்டி 27-ந்தேி நள்ளிரவும் நடைபெறுகிறது.
முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 1-0 என வெற்றி பெற்றது.