Home Blog Page 4

பட்டையை கிளப்பிய பட்லர்.. சாதனைக்கு மேல் சாதனை படைத்து அசத்தல்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் களம் இறங்கினார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் கடைசி வரை களத்தில் தனி நபராக நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

தொடக்கத்தில் மெதுவாக பட்லர் விளையாடினார். முதல் 6 ஓவரில் 12 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார்.

ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அதே நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் பட்லர் ஸ்டிரைக்கை தக்க வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் இருந்த ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பார்த்துக் கொண்டு புத்தி சாலித்தனமாக ஆடினார். தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.

ஐ.பி.எல். போட்டியில் பட்லர் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அவரது 2-வது சென்சுரி ஆகும் ஐ.பி.எல்.லில் அதிக சதம் அடித்த வீரர்களில் பட்லர் 2-வது இடத்தில் உள்ளார். கோலி 8 சென்சுரியுடன் முதல் இடத்திலும் கிறிஸ் கெய்ல் 6 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும். அவர் கிறிஸ் கெய்ல் (22 சதம்), பாபர் ஆசம் (11), விராட்கோலி (9), ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.

கடைசி 6 ஓவரில் ராஜஸ்தான் 96 ரன் எடுத்தது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு அந்த அணி பஞ்சாப்புக்கு எதிராக கடைசி 6 ஓவரில் 92 ரன் எடுத்தது.

இதே போல கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைனும் சதம் அடித்து சாதனை புரிந்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போய் விட்டது.

 

தோல்வி கசப்பான மாத்திரை போல் இருக்கிறது- ஷ்ரேயாஸ் அய்யர் புலம்பல்

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 224 ரன் இலக்கை எடுத்து ராஜஸ்தான் சாதனை வெற்றியை பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன் என்ற இமாலய இலக்கு இருந்தது.

சுனில் நரைன் 56 பந்தில் 109 ரன்னும் (13 பவுண்டரி, 6 சிக்சர்), ரகுவன்ஷி 18 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். அவேஷ்கான், குல்தீப் சென் தலா 2 விக்கெட்டும், போல்ட், யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி பந்தில் வெற்றி பெற்று சாதித்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 60 பந்தில் 107 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ரியான் பராக் 14 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), போவெல் 13 பந்தில் 23 ரன்னும் (1 பவுண்டரி 3 சிக்சர்) எடுத்தனர். ஹர்சித் ரானா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

224 ரன் இலக்கை எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் தனது சாதனையை சமன் செய்தது. 2020-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான் 224 ரன் இலக்கை எட்டி பிடித்து சாதனை புரிந்து இருந்தது. அதை நேற்று சமன் செய்தது.

ராஜஸ்தான் அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

பட்லர் ஒரு சிறப்பான வீரர். அவர் களத்தில் இருக்கும் போது எந்த ஒரு இலக்கும் பாதுகாப்பாக இருக்காது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

6-வது விக்கெட் விழுந்த பிறகு ரோமன் போவல் உள்ளே வந்து அடுத்தடுத்து 2 சிக்சர்கள் அடித்ததும் நாங்கள் இன்னும் ஆட்டத்தில் இருப்பது போல உணர்ந்தோம். அவர் ஆட்டம் இழந்த பிறகு ஜோஸ் பட்லர் அதிரடியை வெளிப்படுத்தினார். எங்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது.

இது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த பிட்ச் அவர்களுக்கு பொருத்தமாக இருந்தது.

ஜோஸ் பட்லர் கடந்த 6-7 ஆண்டுகள் செய்ததை தொடர்ந்து செய்துள்ளார். தொடக்க வீரரான அவர் 20 ஓவர் வரை பேட்டிங் செய்தால் எந்த ரன் இலக்கையும் எடுத்து விடுவார். டக் அவுட்டும் ஆவார். கடைசி வரை நின்று வெற்றியும் பெற வைப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா அணி 2-வது தோல்வியை தழுவியது. 223 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் தோற்றதால் அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஏமாற்றம் அடைந்துள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. கசப்பான மாத்திரை போல் இருக்கிறது. பரபரப்பான இந்த போட்டியில் வீரர்களின் உணர்ச்சி தருணங்கள் மாறி மாறி இருந்தன. இந்த நிலை ஏற்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கிரிக்கெட் உண்மையிலேயே கணிக்க முடியாத விளையாட்டாகும்.

இந்த ஆட்டத்தில் நாங்கள் சரியான முறையில் தான் பந்து வீசினோம். கொஞ்சம் தவறினால் கூட பேட்ஸ்மேன்கள் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

நல்ல வேளையாக இந்த தோல்வி எங்களுக்கு இப்போதே கிடைத்து விட்டது. முக்கியமான நேரத்தில் தோல்வி அடைந்திருந்தால் அது கடினமாக இருக்கும். தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டு வலுவாக மீண்டு வருவது முக்கியம்.

சுனில் நரைன் கொல்கத்தா அணியின் விலை மதிக்க முடியாத சொத்து. அவரால் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.

 

12 மாதங்களாக சொந்த அணிக்கு திரும்புமாறு அழைத்தேன்: அவர் சொன்ன பதில் இதுதான்- ராவ்மன் பவல்

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார்.

இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார்.

நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் வரும் ஜூன் 1-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை அணியில் சுனில் நரைன் இடம் பெறுவாரா என ராஜஸ்தான் வீரர் ரோவ்மன் பவலிடம் கேள்வி கேட்க்கப்பட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

220 ரன்களை சேசிங் செய்தது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது. நான் களமிறங்கிய போது சுனில் நரைனை அட்டாக் செய்யும் திட்டத்துடன் தான் களமிறங்கினேன்.

ஏனென்றால் கொல்கத்தா அணியின் சிறந்த பவுலர் நரைன் தான். அதேபோல் சூழலும் அதற்கேற்றபடி அமைந்தது. அதனால் எனது பலத்தை அறிந்து, ஷாட்களை விளையாடினேன். அது ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால் எங்கள் எல்லோரையும் அவர் தவிர்த்துவிட்டு செல்கிறார். அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம். டி20 உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன் நிச்சயம் மனதை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.

ராஜஸ்தான் அணியின் சிந்தனையும், எண்ணமும் ஒன்றாக உள்ளது. அதேபோல் பெஞ்சில் உள்ள வீரர்களுக்கும் சரியான விஷயங்கள் சரியான நேரத்தில் பகிரப்படுகிறது. சர்வதேச வீரரான எனக்கு சரியாக தகவல்கள் சொல்லப்படுவதை நிச்சயம் பாராட்ட வேண்டும். எங்கள் வீரர்கள் அனைவரும் நல்ல சூழலில் உள்ளோம்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்காக நான் 4 அல்லது 5 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடி வருகிறேன். அதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் என்னை மேல் வரிசையிலும் களமிறக்கலாம். அடுத்த சில நாட்கள் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு நாட்களில் சங்கக்காராவின் காதுகளில் இதனை தொடர்ச்சியாக சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க: டோனி- ரெய்னாவின் வீடியோ வைரல்

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்துகளை எதிர்கொண்டார். இதில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனிலும் டோனி கால் வலியால் அவதிப்பட்டு வருவதை பலமுறை பார்க்க முடிந்தது. ஆம், இடது காலில் அவ்வப்போது ஐஸ்பேக் வைத்து வலம் வருகிறார். அப்படி ஒரு வீடியோ தற்போதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மும்பை போட்டியை முடித்துக் கொண்டு சிஎஸ்கே வீரர்கள் லக்னோவிற்கு புறப்பட தங்கியிருந்த அறையிலிருந்து வெளியில் வருகின்றனர்.

அதில், டோனி நண்பனும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா உடன் கையை பிடித்துக் கொண்டு வருகிறார். அப்போது படிக்கட்டில் இறங்குவதற்கு சுரேஷ் ரெய்னா உதவி செய்திருக்கிறார். ரெய்னாவின் கையை பிடித்துக் கொண்டு மெதுவாக படிக்கட்டிலிருந்து இறங்கி பேருந்தை நோக்கி செல்கிறார். பேருந்தை அடைந்தவுடன் ரெய்னா வெளியே செல்கிறார். டோனி சிஎஸ்கே பஸ்சில் செல்கிறார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. சிஸ்கே தங்களது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது.

வரும் 19-ம் தேதி லக்னோவில் நடைபெறும் 34-வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லக்னோவின் ஹோம் மைதானத்தில் நடைபெறுகிறது.

கடைசி பந்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சேசிங்கில் சாதனை படைத்த ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் நேற்றைய 31-வது லீக் போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும்.

அதைத் தொடர்ந்து 224 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 19 (9) ரன்னில் அவுட்டாகினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

அதனை தொடர்ந்து பட்லர் -ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்து. அதிரடியாக விளையாடி ரியான் பராக் 34 ரன்களில் அவுட்டாகினார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0, ரோவ்மன் போவல் 26, ரன்களில் அவுட்டாகினர்.

இருப்பினும் தொடர்ந்து ஒற்றை ஆளாக நின்ற பட்லர் கொல்கத்தா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அபாரமான சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 107* (60) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ராஜஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (224) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் அணி சமன் செய்தது. இதற்கு முன் 2020 சீசனில் பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு வருடத்திற்கு பிறகு இந்தியா திரும்பிய அனுஷ்கா சர்மா

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி மகள் வாமிகா பிறந்தாள். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், அதற்கு முன் சில மாதங்களாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தையை வரவேற்க இருப்பதாகவே செய்தி வெளியாகி வந்தது. இது குறித்து இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்போது தான், விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவியர்ஸ் தனது யூடியூப் சேனலில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.இதையடுத்து, ஒரு சில நாட்களுக்கு பிறகு அது உண்மையில்லை என்று அதற்கு மறுப்பு செய்தியும் வெளியிட்டார்.

இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், பிப்ரவரி 15-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் 20-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர்.

தற்போது விராட் கோலி ஐபிஎல் தொடரில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் அனுஷ்கா சர்மா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு தனது மகன் அகாய் மற்றும் மகள் வாமிகா உடன் லண்டனிலிருந்து திரும்ப வந்துள்ளார். இந்தியா வந்த அவரை மும்பை விமான நிலையத்தில் புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அப்போது தனது மகன் மற்றும் மகளை கேமராவிற்கு மறைத்து தான் மட்டுமே போஸ் கொடுத்துள்ளார். ஆனால், மகனை புகைப்பட கலைஞர்களிடம் காண்பித்துள்ளார். புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஆர்சிபி விளையாடும் போட்டியை பார்க்க அனுஷ்கா வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜெயிலர் 2 வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு- நடிகர் வசந்த் ரவி

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி.

‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ‘பொன் ஒன்று கண்டேன்’.

ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. நாளை (ஏப்ரல் 18) வசந்த் ரவியின் பிறந்தநாள்.

இதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நிறைய பேர் என்னிடம் எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்? என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது.

நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை.

‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார். அது உண்மையிலேயே பெரிய விஷயம்.

அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது.

‘ஜெயிலர் 2’ வருகிறது என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், ‘ஜெயிலர்2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம்’ “பார்ட்-2க்கான லீட் இருக்கு சார்” என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட் படத்தில் விஜயகாந்த் : பிரேமலதா தந்த அப்டேட்

கடந்த டிசம்பர் இறுதியில் நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் தனது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்த சகாப்தம் என்கிற படத்தில் தான் கடைசியாக நடித்தார்.

அதன்பிறகு இயக்குனர் விஜய் மில்டன், விஜய் ஆண்டனியை வைத்து தான் இயக்கி வந்த மழை பிடிக்காத மனிதன் என்கிற படத்தில் விஜயகாந்த்தை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க போவதாக அறிவித்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக கடைசி வரை அவரால் தான் நினைத்ததை செய்ய முடியாமலேயே போனது. அது குறித்த வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாக மீண்டும் விஜயகாந்த்தை திரையில் கொண்டு வர இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

விஜய்யை வைத்து தற்போது கோட் என்கிற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு ஏற்கனவே அதில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என விஜய்யுடன் ஒரு வித்தியாசமான நட்சத்திர கூட்டணியை இணைத்து உருவாக்கி உள்ளார்.

இந்த நிலையில் தான் விஜயகாந்த்தையும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்ற வைக்க இருக்கிறார். இது குறித்த தகவல் ஏற்கனவே கசிந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பலமுறை எங்களது வீட்டிற்கு வந்து சண்முக பாண்டியனை சந்தித்து விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைப்பது குறித்து பேச வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

பிரச்சாரத்திற்கு இடையே ஒருநாள் சென்னை வந்தபோது அவர் என்னை சந்தித்து முழு விவரங்களையும் சொன்னார். விஜய், வெங்கட் பிரபு இருவரையுமே சிறு வயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன்.

விஜயகாந்த் இருந்தால் எப்போதுமே விஜய்க்கு நோ சொல்ல மாட்டார். தேர்தல் முடிந்ததும் விஜய்யும் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

நீங்கள் மட்டும் தான் சம்பாதிக்கணுமா… : ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை சாடிய விஷால்

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலும், முன்னாள் நடிகரும், தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். சமீபத்தில் கூட நடிகர் சங்க கட்டடம் கட்ட உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இந்த நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் எனது படமான ‘மார்க் ஆண்டனி’யை வெளிவரவிடாமல் தடுத்தது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் விஷால்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. யாருக்கும் தமிழ் சினிமா சொந்தம் கிடையாது. சினிமா என் கையில்தான் இருக்கிறது என்று சொன்னவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. வட்டிக்கு வாங்கி, வியர்வை சிந்தி ஒரு படம் எடுத்தால், அதை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தமிழ் சினிமாவை நீங்கள்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? என்று ரெட் ஜெயன்ட்டில் இருக்கும் ஒரு நபரிடம் கேட்டேன்.

காரணம் ‘மார்க் ஆண்டனி’ படத்துக்காக என்னுடைய தயாரிப்பாளர் 65 கோடி செலவு செய்திருக்கிறார். ஒன்றரை மாதமாக படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும்போது அதை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்லும் போது எனக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கள் மட்டும் தான் உங்கள் படத்தை ரிலீஸ் செய்து நீங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று ஏதவாது ரூல்ஸ் இருக்கிறதா? நான் அவர்களையும் மீறி குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ததால்தான் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்தது. எனக்கு ஒரு நல்ல வெற்றி கிடைத்தது. நான் அன்று சும்மா இருந்திருந்தால் படம் ரிலீஸ் ஆகியிருக்காது.

‘ரத்னம்’ படத்துக்குக் கூட பிரச்சினை வரும். வேண்டுமென்றே வேட்டு வைப்பார்கள். இங்கே யாருக்கும் தைரியம் கிடையாது. நட்புக்கும், வியாபாரத்துக்கும் இடையே நான் ஒரு கோடு வரைந்திருக்கிறேன். வியாபாரம் என்பது என்னுடைய உழைப்பு. யாரும் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள விடமாட்டேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நேரத்தில் விஷால் அளித்துள்ள இந்த பேட்டி சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

‘மருதநாயகம்’ படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க கமல் திட்டம் : ஆஸ்கர் விருது இயக்குனருடன் ஆலோசனை

கமல்ஹாசனின் கனவு படம் ‘மருதநாயகம்’. இந்த படத்தை பிரிட்டிஷ் மகாராணி தொடங்கி வைத்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக 30 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் டிராப் ஆனது. ஆனாலும் மருதநாயகத்தை எப்படியாவது கொண்டு வருவேன் என்று கமல் அடிக்கடி கூறிவந்தார். தற்போது சினிமாவில் மொழி எல்லைகள் விரிந்து ஆயிரம் கோடியை தாண்டிய பட்ஜெட்டில் படங்கள் உருவாக தொடங்கி உள்ளது. இதனால் கமலும் தனது மருதநாயகத்தை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறார்.

படத்தை ஹாலிவுட்டில் தயாரித்தால் உலக அளவிலான மார்கெட்டிங் சாத்தியம் என்பதை உணர்ந்த கமல் இதுகுறித்து தற்போது இந்தியா வந்துள்ள மெக்சிகோ இயக்குனர் அல்போன்சா குயூரனை தனது அலுவலத்திற்கு அழைத்து வந்து இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அல்போன்சா புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர். தனது கிராவிட்டி, ரோமா படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர். இந்த சந்திப்பின் போது மருதநாயகம் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், மேக்கிங் வீடியோவை அல்போன்சாவுக்கு காட்டி உள்ளார் கமல். இந்த சந்திப்பின் போது இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சித்தார்த், நடிகை அதிதிராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள கமல், “நாங்கள் சினிமா பற்றி மட்டுமே பல மணி நேரம் பேசினோம். நான் மதிய உணவின் போது மாம்பழங்களை அவருக்கு அளித்தேன். அப்போது சித்தார்த், ‘அல்போன்சாவுக்கு பங்கனப்பள்ளி மாம்பழம் கிடைத்திருக்கிறது’ என்று கிண்டல் செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.