Home Blog Page 308

அதிவேக வீதியில் சிக்கிய பேருந்துகள்! பொலிஸார் அதிரடி!

இன்று (03) காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் அதிவேக வீதியில் சாதாரண பயணிகளை சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் சென்ற 4 பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களை கைப்பற்றியதாக அதிவேக வீதி சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டாவை அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த சட்டவிரோத பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதிவேக வீதிகளில் பேருந்துகள் இயங்கும் போது, ​​பேருந்துகளில் பயணித்தவர்கள் நின்று கொண்டிருந்தது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உரிமம் பெற்ற பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் உரிமையாளர்களால் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு கிடைத்த தகவலின் படி அலுவலக போக்குவரத்து சேவையாக சாதாரண பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளை கண்டுபிடித்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வேகா கார்களுக்கு இலங்கையில் அங்கீகாரம்

வேகா´ கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் ´வேகா´ காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார்.

இதன்போது மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் ´வேகா´ காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.

60 ஆயிரம் முட்டைகள் பறிமுதல்!

ஜாஎல, தண்டுகம பகுதியில் 60,000 முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்த வர்த்தகர் ஒருவரின் களஞ்சியசாலைக்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று (02) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த முட்டை இருப்பு தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டு இன்று (03) தீர்மானம் எடுக்கவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல், அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமிக்கு சொந்தமான ஜாஎல, தண்டுகம முட்டை களஞ்சியசாலைக்கு முட்டை கொள்வனவு செய்வதற்காக நுகர்வோர் சேவை அதிகார சபையின் கொழும்பு விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் அங்கு சென்றுள்ளார்.

களஞ்சியத்தின் உரிமையாளர் என்டன் நிஷாந்த அப்புஹாமியிடம் 260 முட்டைகள் வேண்டும் என்று அதிகாரி கேட்டபோது, ​​சில்லறை விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதில்லை என்றும், தேவைப்பட்டால் 10,000 முட்டைகளை வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் களஞ்சியத்தை சோதனையிட நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றிருந்தனர்.

களஞ்சியத்தை பரிசோதிக்க என்டன் நிஷாந்த அப்புஹாமி கடும் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட சூடான சூழ்நிலை காரணமாக நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் ஜாஎல பொலிஸில் சென்று தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு செய்துள்ளனர்.

வெலிசர நீதவானிடம் விடயங்களை அறிக்கை செய்ததன் பின்னர், களஞ்சியசாலையை பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சுமார் 60,000 வெள்ளை மற்றும் சிவப்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை, மறைத்து வைத்து நிபந்தனைகளுடன் விற்பனை செய்தமை போன்ற காரணங்களால் களஞ்சியசாலைக்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகாரசபை நேற்றிரவு நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்வேறு நிறுவனங்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக 47 ரூபாய்க்கு முட்டைகளை விற்பனை செய்தமைக்கான பற்றுச் சீட்டுக்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.

அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்டெபி கிராப்பின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

துபாய் ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து மகுடம் சூடிய செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 14 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,980 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6,780 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிரீசின் சிட்சிபாஸ் 5,805 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2 இடம் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜோகோவிச் ‘நம்பர் ஒன்’ இடத்தில் பயணிப்பது இது 378-வது வாரமாகும்.

2011-ம் ஆண்டு ஜூலையில் தனது 24-வது வயதில் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் அமர்ந்த அவர் அப்போது தொடர்ச்சியாக 122 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு சில சறுக்கலுக்கு பிறகு மீண்டும் முதலிடத்துக்கு வந்தார்.

இப்படியே ஏறுவதும் இறங்குவதுமாக உள்ள ஜோகோவிச் கடந்த மாதம் அவுஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியதும், அல்காரசை பின்னுக்கு தள்ளி மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

3ஆவது டெஸ்ட்: அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி !

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 109 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்ததோடு, அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 88 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸூம்163 ஓட்டங்களுக்குள் நிறைவுக்கு வந்தது. 45 வருடங்களுக்கு பின்னர் இந்திய அணி இரு இன்னிங்ஸூகளிலும் 200 ஓட்டங்களுக்கு குறைவாக பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர், 76 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 1 விக்கட்டினை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக Nathan Lyon தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ராஜ்கமல் அலுவலகத்தில் கமல் – பாரதிராஜா திடீர் சந்திப்பு

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து எச்.வினோத், பா.ரஞ்சித் ஆகியோரின் டைரக்சனில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் பாரதிராஜா தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். 16 வயதினிலே படத்திலிருந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாக இவர்கள் இருவரின் நட்பு தொடர்பு வருகிறது. குறிப்பாக கமலின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையில் பாலச்சந்தருக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை கொடுத்தவர் பாரதிராஜா.

அந்த வகையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து சினிமா குறித்த புதிய விஷயங்களை பரிமாறிக் கொள்வது உண்டு. தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் பாரதிராஜா, கமல் இருவரும் சந்தித்து சமீபத்தில் உரையாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார் கமல்.

இந்த சந்திப்பு குறித்து அவர் கூறும்போது, “மூன்று வழக்குரைஞர்கள்.. ஒரு மணப்பெண். ‘சினிமா’. திரு பாரதிராஜாவும் நானும்.. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் என் முன்னே மூவியாலாவும் பின்னணியில் மறைந்த திரு ஆனந்து அவர்களும். இருவருமே சினிமா குறித்து எனக்கு நிறைய கற்பித்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

 

வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்வோரின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானம்

வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் (Biometrics) தரவுகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஜனவரி மாதத்தில் 24,236 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெவ்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

உயிரியளவியல் (Biometrics) என்பது மனிதர்களின் உடல் அல்லது நடத்தை சார்ந்த உள்ளார்ந்த தனிப்பட்ட கூறுபாட்டைத் தனித்துவமான முறையில் அடையாளம் காண்பதற்கான அளவீடுகளும் கணக்கீடுகளும் சார்ந்த அறிவியல் முறையாகும்.

ரஜினி 170 : பட கதை, கேரக்டர் என்ன?

நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ஜாக்கி ஷெராப் , மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க போகிறார் ரஜினிகாந்த்.

இதற்கிடையே ரஜினியின் 170வது படத்தை ஞானவேல் இயக்குவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 2024ல் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த சில தகவல் கசிந்துள்ளது.

அதாவது ரஜினி 170 வது படமும் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை போன்று ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறதாம். இதில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி, தூக்கு தண்டனைக்கு எதிராக போராடுபவராக நடிக்கிறாராம். தூக்கு தண்டனைக்கு எதிராக அவர் போராடுவது தான் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய ராசிபலன் 03.03.2023

மேஷம்

குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.ஆடை ஆபரணம்சேரும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணி களை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்

விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்

பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியைபைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

கன்னி

உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்‌. அந்தஸ்து உயரும் நாள்.

துலாம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சிலதந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும்.வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை அதிகம் தேவைப்படும் நாள்.

தனுசு

மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகரம்

விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.