Home Blog Page 309

மாதம் ரூ.1000 கிடைக்கவுள்ள ரேசன் அட்டைகள்.. விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு!

மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஈரோடு தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தார். இந்த உரிமைத்தொகை என்பது 2021ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதியாகும்.

அதன்படி, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் திகதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை என்றாலும் இது அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா? இந்த உரிமைத்தொகையை வாங்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற பல கேள்விகள் மக்களிடையே இருந்தது.

அதன்படி அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும். அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ரேசன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது.

 

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்

ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கிளை இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமையப்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளையின் சிரேஷ்ட பிரதானி Peter Breuer, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கிளையின் தலைமை அதிகாரி Masahiro Nozaki ஆகியோர் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்வதற்கு புதிய வருமான வரி உதவி செய்யும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய வருமான வரி அமைந்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி சீர்திருத்தம் தற்போதுள்ள நிலைமையை சீர் செய்ய உதவும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அம்பன்பொல பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிகவலயாய பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, எஹெதுவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஹெதுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அணுமின் நிலையங்களை அமைக்கும் ரஷ்யாவின் முன்மொழிவை பரிசீலிக்க தீர்மானம்

இலங்கையில் அணுமின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுடன் கூடிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ரஷ்யா முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோஸா கூறியுள்ளார்.

அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நடவடிக்கை குழுவொன்றையும், 9 செயற்பாட்டுக் குழுக்களையும் நியமிக்க அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானித்தது.

அணு மின் நிலையத்தை நிலப்பரப்பில் அமைப்பதா அல்லது கப்பலில் பொருத்தி கடற்பரப்பில் செயற்படுத்துவதா என்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, ரஷ்யாவை சேர்ந்த ஒரு குழுவினரூடாக மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கும், சுமார் மூன்று வருடங்களுக்குள் இலங்கையில் ஒரு குழுவினருக்கு அதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் Rosatom State Nuclear Energy நிறுவனம் இதற்கான திட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளது.

100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று சிறிய கடல் அணு மின் நிலையங்களை தேர்ந்தெடுக்கும் சாத்தியம் இலங்கைக்கு உள்ளதாக S.R.D. ரோஸா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான முதலீடுகள், சலுகைக் காலம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வதற்காக பங்களாதேஷுடன் ரஷ்யா செய்துள்ள ஒப்பந்தத்தை இலங்கை தற்போது ஆய்வு செய்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 

விரைவாக மாற வேண்டும் – வலியுறுத்திய ஜனாதிபதி!

பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான தேவை ஏற்பட்டுள்ள இக்காலத்தில், ஒன்றிணைக்கப்படும் டிராக்டர்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை இன்று முதல் கொள்வனவு செய்வதற்கு வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தினால் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

திறந்து வைக்கும் நிகழ்வுக்குப் பின்னர், தொழிற்சாலை வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

சைக்கிள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை இணைக்கும் செயற்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

வோல்டா நிறுவனத்தின் திறமைகளை பார்வையிடக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனத்திற்கு அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஆதரவு தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பசுமை வலுசக்தி பொருளாதாரத்தை உருவாக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நாம் பாராட்ட வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை, பசுமை வலுசக்தி பொருளாதாரத்திற்கு மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும். இப்போது உலக நாடுகள் பசுமை வலுசக்தி பொருளாதாரத்தை நோக்கி நகர்கின்றன. இலங்கை என்ற வகையில் நாமும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த ஐந்தாண்டுகளில், பசுமை வலுசக்தி பொருளாதாரத்தை நோக்கி நகர்வதன் மூலம் பல நன்மைகளை அடைய இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு, சுயமாக முன்னேறும் இத்தகைய முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் நாட்டுக்குத் தேவை. எனவே, ஜகத் மாகவிடவின் இந்த வர்த்தகத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.

நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, சிறிபால கம்லத், பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிரி சூரியாரச்சி, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் ஜகத் மாகவிட உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இராணுவத்தினரின் குறுக்கே சென்ற இருவர் கைது

நீர்வேலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் ரோந்தில் சென்ற இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர், துவிச்சக்கர வண்டியில் சென்ற இராணுவத்தினருக்கு குறுக்கே நின்று வழிமறித்து,இடையூறு விளைவித்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாரினால் பூதர் மடம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

“குடு அஞ்சு”வுக்கு உதவிய தம்பதியினர் கைது

டுபாயில் தலைமறைவாகியுள்ள “இரத்மலானை குடு அஞ்சு”வின் பண விவகாரங்களை நிர்வகித்த கணவன் மனைவி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 14 இலட்சம் ரூபா பண கையிருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரிய-ஒருவல பிரதேசத்தில் இரண்டு மாடி கொண்ட சொகுசு வீட்டில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் “இரத்மலானை குடு” அஞ்சுவின் உறவினர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் சென்று போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணம் வசூலித்ததாகவும், பின்னர் அதற்காக சொகுசு காரை குடு அஞ்சு கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் மனைவி போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான கணவன் மற்றும் மனைவி தம்பதியினர் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2021 ஜூன் 03 அன்று அதுரிகிரிய பிரதேசத்தில் வைத்து அத்துரிகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் T-56 துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தம்பதிகள் 26 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

உக்ரைன்-ரஷ்யா போர் : சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும், உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதற்கிடையே சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகவும், அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது குறித்து தெரிவித்த அவர்,

உக்ரைனில் ரஷ்யாவில் ஆக்கிரமிப்புக்கு சீனா ஆதரவளித்ததுடன், ரஷ்யாவுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகின்றது. ‘நான் சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரி வாங் யியை பார்த்தபோது… ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு சீனர்கள் பரிசீலித்து வருகின்றனர் என்ற தகவல் குறித்து அவரிடம் எங்களின் கவலையை தெரிவித்தேன்.

இது இருதரப்பு உறவில் கடுமையான பிரச்சனையாக இருக்கும் என்றும், விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி !

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

எனவே ,உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இதனிடையே அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.இதனால் அரசாங்கம் நிர்வாகமே கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இராணுவத்திற்கான சிறப்பு நிதி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீரர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீல்டு கமாண்டர்கள் குவார்ட்டர் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து, உணவுப்பொருள் விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரச்சினை தொடர்பாக சரக்குப் போக்குவரத்து தலைமை அதிகாரி மற்றும் இராணுவ இயக்குநர் ஜெனரல் ஆகியோருடன் இராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவந்தபோதும் பாகிஸ்தானில் பணவீக்கம் ஏறிக்கொண்டே இருக்கின்றது.

வாராந்திர பணவீக்கம் 40 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஐந்து மாதங்களில் முதல் முறையாக பணவீக்கம் 40 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் இராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகின்றது.

இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய இராணுவ உதவிப் பொதியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் ஜான் கிர்பி, புதிய இராணுவ உதவியின் மதிப்பு இன்னும் வெளிடவில்லை என்றும், மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.