Home Blog Page 311

வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்பும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியே

ராஜபக்ச அரசாங்கமும், ராஜபக்ச நிழல் அரசாங்கமும் இந்நாட்டு மக்களின் இயல்பு வாழக்கையை சீரழித்து விட்டதாகவும், எல்லா வகையிலுமான வரிகளும் அதிகரிக்கப்பட்டு மின்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண மக்கள் முதல் பாடசாலை பிள்ளைகள் வரை அனைவரும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் இவ்வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பொருளாதாரத்தை விரிவடையச் செய்து, மனிதாபிமான முதலாளித்துவ அமைப்பில் செல்வப் பெருக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு, சமூக ஜனநாயக கட்டமைப்பில் வளங்கள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டு நாட்டில் நீதி நியாயம் கோலோச்சும் அரசாங்க பொருளாதார முறைமை ஏற்படுத்துவோம் என்ற எதிர்பார்பையே மக்களுக்கு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மனிதாபிமான முதலாளித்துவமும் சமூக ஜனநாயகமும் மட்டுமே இந்நேரத்தில் நாட்டிற்கு ஒரே வழி, ஒரே ´பதில்´ எனவும், அனைவருக்கும் பயனளிக்கும் வளமான சகாப்தத்தை உருவாக்கி, கிராமத்தை கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்பும், நகரத்தைக் கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய எண்ணக்கருவாகும் எனவும், இதற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ஒரு நாடாக, தொழில்நுட்பம், அறிவு மற்றும் புதிய முறைமைகளின் அடிப்படையிலையே நாம் முன்னேற வேண்டும் எனவும், அறிவு மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் ஊடாக ஏற்றுமதி ஊக்குவிப்பு முதலீட்டுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சமுத்திரங்களை மையமாகக் கொண்ட நீலப் பொருளாதாரம் மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட பசுமைப் பொருளாதார அமைப்புக்கு மாறுவதன் மூலம் காபன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் ஊடாக உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆதரவை எமது நாடு பெற முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டு இளைஞர்களை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான அறிவாற்றலில் வலுப்படுத்தி வறுமையை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரக்வான கொடகவெல பிரதேசத்தில் நேற்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு இலவச எரிபொருளுக்கான டோக்கன்கள் விநியோகம்

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நாட்டின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று முதல் அனைத்து விவசாயிகளும் நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தீவிரமடையும் காலநிலை மாற்றம்: அண்டார்டிகாவில் வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள்

Antarctica: அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கோடையில் உருகி வருவது செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. அதிகரித்து வரும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் முன்பைக் காட்டிலும் வேகமாக உருகி வருகின்றன.

இந்த அதீத காலநிலை மாற்றத்தால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் முந்தைய கோடை காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வேகமாக உருகி வருவதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2014 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், முந்தைய கோடை காலங்களைக் காட்டிலும் 22% வேகமாக பனிப்பாறைகள் உருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு பனிப்பாறைகள் வேகமாக உருகுவது கடல்நீர் மட்ட உயர்விற்கு வித்திடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பனிப்பாறைகள் உருகுவதால் கடந்த 1992 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 7.6 மில்லிமீட்டர் அளவில் கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் அதி சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான FIFA விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி

2022 ஆம் ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை அர்ஜென்டின அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி வென்றார்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த விருது வழங்கல் விழா பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்கள் , பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் விருது வழங்கல் விழாவில் பங்கேற்றனர்.

பிரேஸிலின் புகழை உலகறியச் செய்த புகழ்பூத்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேவுக்கு இதன்போது விசேட விருது பரிசளிக்கப்பட்டது.

பேலேவின் மனைவி இந்த விருதைப் பெற்றுக்கொண்டதுடன், பிரேஸிலின் முன்னாள் நட்சத்திரமான ரொனால்டோ இந்த விருதை அவருக்கு வழங்கினார்.

ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வுகள் கண்களுக்கு விருந்து படைத்தன.

உலக சம்பியனான அர்ஜென்டினாவின் Lionel Scaloni ஆண்டின் அதிசிறந்த பயிற்றுநருக்கான விருதை வென்றார்.

ஆண்டின் அதிசிறந்த வீராங்கனைக்கான விருதை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ஸ்பெய்னின் Alexia Putellas வெற்றிகொண்டார்.

உலக சம்பியனான அர்ஜென்டின அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதுக்கு பாத்திரமானார்.

 

8 தமிழக படகுகள் அரசுடமையாக்கம்

தமிழக கடற்தொழிலாளர்களின் 8 படகுகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, முன்னதாக எட்டு படகுகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றது.

அதன் போது, 4 படகுகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று படகுகளின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகாது, தமது சார்பில் வேறு நபர்களை அனுப்பி வைத்தமையால், குறித்த மூன்று படகுகளும் அரசுடைமையாக்கப்பட்டது.

அதேவேளை ஒரு படகுக்கான உரிமை கோரல் விசாரணைக்காக மே மாதம் திகதியிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, மேலும் ஒரு படகு தொடர்பிலான விசாரணைகளும் நடைபெற்று, அந்த படகுக்கான விசாரணைகள் நேற்றைய தினம் முடிவுறுத்தப்பட்டு, அது தொடர்பான கட்டளைக்கு மே மாதம் 5ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற மேலுமொரு படகு வழக்கில் 5 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

மேலுமொரு படகுக்கான கட்டளைக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.

அதேவேளை மற்றுமொரு படகுக்கான கட்டளைக்காக மே மாதம் 8 ஆம் திகதி நீதிமன்று திகதியிட்டுள்ளது.

 

இலங்கையில் எடை கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Overweight sweaty boy running, cute chubby child cartoon character vector Illustration isolated on a white background.

இலங்கையில் அதிக எடை மற்றும் வயிறு பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன கூறுகிறார்.

உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் “விழிப்புடன் இருப்போம், பருமனில் இருந்து விடுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சாந்தி குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதி

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்கள் உட்பட வர்த்தக கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு அதிகபட்ச பங்களிப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை வகிக்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைத்துப்பாக்கியுடன் பயணித்த நபரொருவர் பொலிஸாரால் கைது!

கைத்துப்பாக்கியை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளிலில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சந்தேகத்தின் பேரில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பண்டாரநாயக்க மாவத்தை சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இவரைக் கைது செய்தார்.

சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் கம்பஹா யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்கவுக்குச் சொந்தமான பண்ணை ஒன்றிற்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (01) குருநாகல் மாவட்டத்தின் கொபேகனே, மிரிஹானேகம, ஔலேகம மற்றும் பிங்கிரிய பிரதேசங்களில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பான சோதனைகள் நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டன.

அங்கு கொபேகனே பகுதியில் நடத்தப்பட்டு வந்த சரத் ரத்நாயக்க என்பவருக்குச் சொந்தமான முட்டைப் பண்ணையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டதை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று பண்ணைகளுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்ற மாணவி ஒருவர் சுயநினைவற்ற நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ரிதிகம பிரதேசத்தை சேர்ந்த அபேவர்தன முதலிகே தொன் வித்யானி மதுமாலிகா டி சில்வா என்ற 26 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவர் குருநாகல் மலியதேவ மகளிர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவியாவார்.

இவர் சில காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

மயக்கமடைந்த மாணவி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சுயநினைவு திரும்பிய போது மன அழுத்தத்திற்காக கொடுக்கப்பட்ட மருந்தை அதிகளவில் உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

குறித்த மருந்தை தற்செயலாக அளவுக்கதிகமாக உட்கொண்டதாலா அல்லது தற்கொலைக்காக வேண்டுமென்றே மருந்தை உட்கொண்டதாலா என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித விஜேகோனின் மேற்பார்வையில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.