Home Blog Page 313

தேர்தலை நடத்துமாறு பாகிஸ்தான் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

திட்டமிட்டபடி பொதுத் தேர்தலை நடத்த பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ஒரு நாட்டின் தலைவரை பதவியில் இருந்து அகற்றி தேர்தலை தாமதப்படுத்த அந்நாட்டு இராணுவம் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் கூட்டாக திட்டமிட்டுள்ளனர்” என்ற செய்திகள் வெளியாகிவந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை தடுக்க நிர்வாக, சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நாட்டின் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நாட்டின் பொதுத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

கொள்முதல் விலை ரூபா 352.72 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 362 95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, 2022 மே 4 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 352 ரூபாவுக்கு வந்துள்ளமை இதுவே முதன்முறையென்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக கந்தையா கஜன் நியமனம்.

இளம் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா கஜன் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று (பெப். 28) வழங்கி வைத்தார்.

வடக்கு கிழக்கில் முதலீடுகளை முன்னெடுத்து அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சபோல்க் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் தொடர்பில் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இவர் வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது திறன்களை வெளிப்படுத்தி வருகிறார்.

வணிக அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் நீண்ட அனுபவமுள்ள கஜன், பல்வேறு திட்டங்களின் மூலம் இலங்கை நிலையான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

எரிசக்தி, , நகர மேம்பாடு, கனிம வளங்கள் ஆகியவற்றிற்காக முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் இலங்கையில் கல்வித்துறை ,விவசாயத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்ப்பான அபிவிருத்திகளையும்

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஊடாக இலங்கையில் விவசாய கால்நடைவளர்ப்பு தொடர்பான பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்ட முகாமையாளராகவும் இவர் இலங்கையில் செயற்பட்டு வருகின்றார் . கல்வி சார் அபிவிருத்திகளையும் அது தொடர்பான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதுடன் இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் பல திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

இங்கிலாந்து உட்பட உலகில் ஏனைய நாடுகளிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்கும் அவா அவருக்குள்ளது குறிப்பிடத்தக்கது.

பல சர்வதேச நிறுவனங்களின் வணிக முகாமையாளரான இவர் பல்வேறு கலாச்சார அமைப்புகளின் ஸ்தாபகராகவும் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் இலங்கை நொதர்ன் கெம்பஸின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்

மும்பை மைதானத்தில் சச்சின் சிலை : ரசிகர்கள் கொண்டாட்டம்

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் மார்ச் 31-ம் திகதி முதல் தொடங்கி மே 28-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர் பார்த்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24-ம் திகதியன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர்.

ஏப்ரல் 24-ம் திகதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும்.

இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கிண்ண தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

உலக நீர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான சுவரொட்டிப் போட்டி

உலக நீர் தினம் 2023 ஐ முன்னிறுத்தி பாடசாலை மாணவர்களிடையேயான சுவரொட்டிப் போட்டியொன்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நடாத்தப்படவுள்ளது.

இவ்வருட உலக நீர் தின கருப்பொருளான ‘நீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துவதாகும்’ (Accelerating change to solve the water and sanitation crisis)  எனவே இக் கருப்பொருளுக்கு அமைவாக ஆக்கங்களை மாணவர்கள் தயாரிக்க வேண்டும்.

குறித்த போட்டியில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை ஒன்றிணைத்து கிளிநொச்சியில் இடம்பெறும் உலக நீர் தின நிகழ்வில் வழங்கப்படும்.

போட்டிகள் நான்கு பிரிவாக நடாத்தப்படவுள்ளன அந்த வகையில்

பிரிவு 01 – தரம் 03 தொடக்கம் 05 வரை,

பிரிவு 02 – தரம் 06 தொடக்கம் 09 வரை,

பிரிவு 03-  தரம் 10 தொடக்கம்11 வகுப்புகளுக்கும்,

பிரிவு 04-  உயர் தரத்திற்கும் என பிரிக்கப்பட்டுள்ளன.

சுவரொட்டிகள் A4 அளவுத்திட்டத்தில் தயாரிக்கப்படவேண்டும். கைகளால் தயாரிக்கப்படவேண்டும் (கணினி சார் தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட்ட முடியாது) மாணவர்களின் ஆக்கமானது அதிபரினால் அல்லது பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களால் உறுதிப்படுத்தப்படுவதோடு மாணவர் பெயர், தரம், பாடசாலை என்பன தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கப்படுவதோடு தெரிவு செய்யப்படும் அனைத்து சுவரொட்டிகளும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்படும்

ஆக்கங்கள் அனைத்தும் 15.03.2023 ற்கு முன்னதாக பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலகம் பிராந்திய சேவைகள் நிலையம் – வடக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வவுனியா அல்லது அல்லது உங்களது பிரதேசத்தில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் நேரடியாகவோ அல்லது dgm.section@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும்.

பேரழிவை ஏற்படுத்திய கொரோனா எங்கிருந்து உருவானது? : அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

2AP1TD2 Coronavirus outbreak and coronaviruses influenza background as dangerous flu strain cases as a pandemic medical health risk concept with disease.

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.

3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடித்து வருகின்றது.

இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் உருவானது என பரவலாக குற்றம் சாட்டப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இது குறித்து அமெரிக்க மின்சக்தி அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் ,’சீனாவின் உகானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது’ என கூறப்பட்டுள்ளது. இது கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? என்கிற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியிடம் ஆய்வறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், ‘உளவுத்துறையும், அரசின் பிற துறைகளும் இன்னும் அதை (கொரோனா எங்கிருந்து உருவானது என்பதை) ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை உறுதியான முடிவு எதுவும் இல்லை. எனவே நான் சொல்வது கடினம். ஜனாதிபதி ஜோ பைடன் விரும்புவது உண்மைகளை மட்டுமே.

முழு அரசாங்கமும் அந்த உண்மைகளை பெறுவதற்காக வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

அதைத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் : தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது.

இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று (28) வந்த நபர் ரயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த தகவலை அறிந்த பொலிஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, அந்த நபர் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டுக்கொன்றனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் மூலம் குறித்த நபர் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது.

தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அகமது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்த இரண்டாம் கட்ட விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மேலும் தெரிவிக்கையில் ,

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பெப்ரவரி 28-ம் திகதி ஏற்பட்டுள்ளது, 23:47 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதன் நீளம்: 71.15 ஆகும், நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோவில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோவில் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாகவுள்ளது.

இந்த கும்பல்களை சேர்ந்தவர்கள் அங்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

இராணுவமும் அவர்களுக்கு தக்கப்பதிலடியை கொடுத்து வருகின்ற நிலையில் நியூவோ லாரெடோ நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்குள்ள சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வேனை சோதனைக்காக நிறுத்தும்படி இராணுவ வீரர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த வேன் நிற்காமல் இராணுவ வீரர்களை கடந்து சென்றுள்ளது. அதை தொடர்ந்து இராணுவ வீரர்கள் அந்த வேன் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் வேன் சாலையோரமாக மோதியது. இதையடுத்து, இராணுவ வீரர்கள் அங்கு சென்று பார்த்த போது வேனில் இருந்த 5 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர்.

வேனை சோதனையிட்டபோது அதில் துப்பாக்கி, போதை பொருள் போன்ற எதுவும் கிடைக்கவில்லை எனவும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 5 பேரும் பொது மக்கள் என்பது தெரியவந்துள்ளது.

தாமதமின்றி தேர்தலை நடத்துமாறு செனட் சபையின் வௌியுறவு குழு வலியுறுத்தல்

தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மக்களின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயக விரோத செயற்பாடு என ட்விட்டர் செய்தியூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனூடாக இலங்கை மக்களின் உரிமை மீறப்படுவதாக அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு சுட்டிக்காட்டியுள்ளது.