Home Blog Page 314

ஆயிரம் பால்மா பொதிகளை கொள்ளையிட்ட மூவர் கைது

தெமட்டகொடை பிரதான சந்தையில் சுமார் ஆயிரம் பால்மா பொதிகளை திருடிய சம்பவம் தொடர்பில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூவர் உட்பட 4சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்நேகநபர்கள் மூன்று மாத காலமாக நாளொன்றுக்கு 8-15 பொதிகளைத் திருடி வருந்தததாகவும் அவற்றின் பெறுமதி தற்போது ரூபாய் 14 இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை பைகளில் அடைத்து, இரவு நேரங்களில் கடையின் முன் ஊழியர்கள் வைத்திருப்பதுடன், மர்ம நபர்கள் இந்த பால் பவுடர் பாக்கெட்டுகளுடன் கூடிய பையை குப்பை பைகளுக்குள் மறைத்து கடைக்கு வெளியே கடத்தி செல்வது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடை ஊழியர்கள் பால் மா பக்கெட்டுகளை ஒரு பொலித்தீன் பையில் குப்பை பைகளுடன் சேர்த்து கடையின் முன், குப்பையாக போட்டுவிட்டு, தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதையடுத்து, அவர் முச்சக்கரவண்டியில் அந்த இடத்திற்குச் சென்று பால் மாவுடன் கூடிய பையை எடுத்து வந்ததாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்

பொலிஸ் வாகனத்தில் எழுதப்பட்ட ஆபாச வார்த்தைகள்

பொலிஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி முழுவதும் ஆபாசமான வார்த்தைகளால் எழுதப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று ஜா-அல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

ஜீப் வண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று (27) பொலிஸ் வாகன பழுதுபார்க்கும் நிலையத்தில் ஜீப்பைக் கழுவி சுத்தம் செய்வதற்காக நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, ​​ஜீப்பின் முன்புறம் மற்றும் கதவுகளில் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது.

ஜீப்பில் ஆபாசமாக எழுதியதுடன், வாகனத்தை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், குறித்த பொலிஸ் வாகன பழுதுபார்க்கும் நிலையத்திற்குள் வெளிநபர்கள் நுழைவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லையெனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்தச் செயலைச் செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

அதன்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கச்சதீவு பெருவிழா ஏற்பாடுகள் நிறைவு

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஊடகங்களுக்கு நேற்று (28) விடுத்த விசேட அறிவிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மார்ச் 3 மற்றும் 4 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மேலும், கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான மார்ச் 3 ஆந் திகதி இரவு உணவு, மார்ச் 4 ஆந் திகதி காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

முன்னதாக மார்ச் 4 ஆம் திகதி கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான காலை உணவு மாத்திரம் இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட செயலாளரால் அறிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவிக்கு நடன ஆசிரியர் செய்த வேலை

பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிக்கு நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நடன ஆசிரியர் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.

மாணவியை தவறு செய்ய தூண்டும் நோக்கில் ஆசிரியர் தொடர்ச்சியாக வட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியை அனுப்பிய செய்திகளின் ஸ்கிரீன் ஷொட்களை மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்த நபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த மாணவியின் தாய் கருத்து தெரிவிக்கையில், பாடசாலை அதிபர் தனது மகளை அலுவலகத்திற்கு வரவழைத்து பலர் முன்னிலையில் பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும் இதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 32 பேர் பலி

கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தவேளை அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதால் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், மேலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

மூன்று கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 9 கிராம் 100 மில்லி கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய 248,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் திருடப்பட்ட தங்கச் சங்கிலி, திருட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் போதைப்பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று(01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண் கான்ஸ்டபிளை தாக்கிய கான்ஸ்டபிள் கைது

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் களனி பொலிஸ் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரி ஒன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், தாக்கப்பட்ட கான்ஸ்டபிள் அவரின் கைத்தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கான்ஸ்டபிள் கடந்த 25ஆம் திகதி இரவு கடமைக்கு வருகை தந்ததுடன், கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியை காண சாதாரண உடையில் யாரிடமும் கூறாமல் சென்றுள்ளார்.

அங்கு இசை நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக சீருடையில் இருந்த பியகம பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்து தாக்கி காயப்படுத்திவிட்டு கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த கான்ஸ்டபிள் நேற்று (27) கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட பல்கலை மாணவி உயிரிழப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (28) இரவு குறித்த மாணவி சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் குறித்த மாணவி இருந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார்.

குருணாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி டி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் சில காலமாக மன அழுத்தத்தினால் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

மண்ணெண்ணெய் விலை குறைப்பு- வெளியானது அறிவிப்பு

மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் யோசனைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, இன்று (01) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மண்ணெண்ணெய் புதிய விலை 305 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்சாலைகளுக்கான மண்ணெண்ணெய் 134 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலையாக 330 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மும்பை மைதானத்தில் சச்சின் சிலை : ரசிகர்கள் கொண்டாட்டம்

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் மார்ச் 31-ம் திகதி முதல் தொடங்கி மே 28-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர் பார்த்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24-ம் திகதியன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர்.

ஏப்ரல் 24-ம் திகதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும்.

இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கிண்ண தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.