Home Blog Page 316

ஜனாதிபதிக்கு எதிராக போராட்ட வழக்கு – மே 8 ஆம் திகதிக்கு தவணை

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை மே மாதம் 8 ஆம் திகதி தவணையிட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்று (28) இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர், பல்கலைக்கழக மாணவர் ஆகியோர் ஆஐராகியிருந்தனர்.

மேலும் சில சந்தேக நபர்களை வழக்கில் இணைக்கப்படவிருப்பதால் பதில் நீதவான் தவபாலன் வழக்கை மே மாதம் 8 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

குறித்த வழக்கில் சட்டத்தரணி க. சுகாஷ் எதிராளிகள் சார்பில் ஆஜரானார்.

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு

இலங்கை இன்று எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு, வளமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்திய – பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான பார்வை: தெற்காசியாவிற்கான தாக்கங்கள்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தலைமையில் நடைபெற்றது.

சீனாவின் பதிலுக்கு அமையவே IMF கடன் வசதியை பெற முடியும் – நிதி அமைச்சு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வசதிக்கான ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறினார்.

Whatsapp இல் மேலுமொரு புதிய வசதி

Whatsapp இல் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் WhatsApp செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக WhatsApp அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

அதன்படி, WhatsApp நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி, நண்பர்களுக்கு அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அனுப்பிய செய்தியை 15 நிமிடத்திற்குள்ளாக திருத்தம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி சோதனை ஓட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் WhatsApp தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தடுக்க விஷம் வைத்து கொல்ல முயற்சி

ஈரான் நாட்டில் சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் சிறுமிகளுக்கு விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே கோம் என்ற நகரத்தில். பழமை வாய்ந்த இந்நகரில் சிறுமிகள் பாடசாலைகளுக்கு செல்வதை மர்ம நபர்கள் சிலர் விரும்பவில்லை. இதனை தடுக்கும் நோக்கத்தில் குறித்த சிறுமிகளுக்குவிஷம் வைத்துள்ளனர்.

பெண்கள் பயிலும் பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என சிலர் விரும்புவது கண்டறியப்பட்டுள்ளதாகவும். இருப்பினும் விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சிலர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், விஷம் வைக்கப்பட்ட சம்பவம் வேண்டும் என்றே செய்யப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை சூட்சுமமாக கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்து 51 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர் கைதானார்.

கைதான சந்தேக நபர் வசமிருந்து 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (21) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சிசார்பில் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

துருக்கி நிலநடுக்கங்களால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் – உலக வங்கி

கடந்த 06ஆம் திகதி துருக்கியில் பதிவான இரு பாரிய நிலநடுக்கங்களினால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மொத்த புனரமைப்பு பணிகளுக்காக செலவாகும் நிதி, இதனை விடவும் இரு மடங்காக அதிகரிக்கலாமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலைமை “உண்மையில் பேரழிவு” என ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் Anna Bjerde தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கங்களினால் துருக்கியில் பதிவாகியுள்ள சேத மதிப்பீடு 34.2 பில்லியன் டொலர் என்பது 2021 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பொருளாதார உற்பத்தியில் 4 வீதத்திற்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 06ஆம் திகதி துருக்கி மற்றும் சிரிய எல்லையில் பதிவாகிய 7.8 மற்றும் 7.5 மெக்னிடியூட் அளவிலான பாரிய இரு நிலநடுக்கங்களிலும் சிக்கி 44,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரு நிலநடுக்கங்களையும் தொடர்ந்து 7,500 இற்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

அரச சாதனங்களில் TikTok செயலிக்கு தடை

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனைத்து சாதனங்களிலிருந்தும் சீன செயலியான TikTok செயலியை தடை செய்வதற்கு கனடா தீர்மானித்துள்ளது.

TikTok செயலியானது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான ஆபத்தை ஏற்படுத்துவதாக கனேடிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் இந்த தீர்மானத்தால் தமது நிறுவனம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக TikTok செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஆணைக்குழுவினால் இதேபோன்ற தடை அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் கனடா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஹைலெவல் வீதியூடாக பயணிக்கும் பஸ்களுக்கு புதிய விதிமுறை

ஹைலெவல் வீதியூடாக பயணிக்கும் அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களும் நாளை மார்ச் முதலாம் திகதி முதல் மாக்கும்புர பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்தின் (Makumbura Multimodal Centre) ஊடாக பயணிக்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயற்படும் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹைலெவல் வீதியூடாக மாக்கும்புரவில் உள்ள பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக பஸ்கள் நிறுத்தி, பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்வதால், அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள ஹைலெவல் வீதியில் பயணிகளை நிறுத்துவது, இறக்குவது, பயணிகளை ஏற்றுவது ஆகியவற்றை தடை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாககும்புர பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள ஹை-லெவல் வீதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை நிறுத்துவது, ஏற்றுவது அல்லது இறக்குவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, இந்த விதி அனைத்து பஸ்களுக்கும் பொருந்தும். இது குறித்து புகார்கள் வந்தால், விசாரணையைத் தொடர்ந்து பஸ்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.