Home Blog Page 318

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும்மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரைவேகத்தில் ஓரளவு பலத்த காற்றுவீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபித்தல்

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்கள் இளைப்பாறிய காலத்தில் அனுகூலங்களுடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும், இளைப்பாறிய ஊழியர்கள் நாட்டுக்கு சுமையின்றி தமது ஓய்வு காலத்தைக் கழிப்பதற்கும் பொருத்தமான சூழலை உறுதிப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் எனும் பெயரிலான நிதியத்தைத் தாபிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச ஊழியர் ஒருவர் அரச சேவையில் இணைந்துகொண்ட பின்னர் அவருடைய அடிப்படைச் சம்பளத்தின் 8% வீதமும், தொழில் வழங்குநரின் பங்களிப்பாக 12% வீதமும் மாதாந்தம் உத்தேச நிதியத்திற்கு வைப்பிலிடுதல் வேண்டும். உத்தேச நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக முகாமைத்துவ சபையொன்றால் நிர்வகிக்கப்படும் சுயாதீன நிறுவனமொன்று தாபிக்கப்படுவதுடன், நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக விசேட தகைமைகளைக் கொண்ட நிதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

உத்தேச பங்களிப்பு ஓய்வூதிய முறைமை எதிர்வரும் காலங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் அரச ஊழியர்களுக்கு ஏற்புடையதாக அமைவதுடன், 2016 ஜனவரி மாதத்தின் பின்னர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்ற ஓய்வூதிய முறைக்கு இயங்கியொழுகுதல் வேண்டுமென்ற ஏற்பாடுகள், அவர்களின் ஆட்சேர்ப்பு நியமனக் கடிதங்களில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தமது சுயவிருப்பின் பேரில் உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதிய சம்பள முறையுடன் இணைந்து கொள்வதற்கு அவர்களுக்கும் இயலும்.

அதற்கமைய, தேவையான ஏற்பாடுகளை இயற்றுவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது

இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான எவ்வாறான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், குறுகிய சுயலாப நலன்களுக்காக சில தரப்புக்கள் தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர், கடந்த காலங்களில் சீனாவினால் கடலட்டைப் பண்ணை கள் அமைக்கப்படுவதாக கிளப்பிவிடப்பட்ட புரளிகள் தோற்றுப் போன நிலையில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி அளிக்கப் போகின்றது என்ற கதைகளை கூற ஆரம்பித்துள்ளதாகவும், இவ்வாறான புரளிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த சில வைத்தியசாலையின் பினவரை ஊடாக வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர். அவர்களை தடுக்க முயற்சித்த காவலாளி மீது வாள்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தெய்வாதீனமாக காவலாளி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படுத்திய குறித்த நபர்கள் சிறிது நேரத்தில் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளனர்.

 

அமெரிக்காவில் விமான விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி-!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு புறப்பட்டுள்ளது.

விமானத்தில் விமானி, வைத்தியர், தாதியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர்.

ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன.

சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்பு படையினர் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில், அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

ஏப்ரலில் கியூ.ஆர். குறியீட்டு முறைமை நீக்கப்படாது – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நடைமுறை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் இடை நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏப்ரல் 10ஆம் திகதி முதல் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக தேசிய எரிபொருள் விநியோக முறைமையின் கீழ் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் நிதியமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடைமுறை பற்றிய முடிவுகள் எடுக்கப்படும். அதனை விடுத்து கியூ.ஆர். குறியீட்டு முறைமை இரத்து செய்யப்பட மாட்டாது.

தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்றைய(26) தினம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலைப் பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(26) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குவைத்தில் இருந்து பணம் அனுப்பும் சேவையில் 20 ஆண்டு நிறைவைக் கொண்டாடிய கொமர்ஷல் வங்கி

இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த கலைஞர்களின் கண்கவர் நிகழ்வுகளோடு கொமர்ஷல் வங்கி குவைத்தில் இருந்து பணம் அனுப்பும் தனது சேவையின் 20 ஆண்டு நிறைவை அண்மையில் அமோகமாக நினைவு கூர்ந்தது. இந்த மைல்கல் நிகழ்வு குவைத்தில் உள்ள மிலேனியம் ஹோட்டல் மற்றும் பணப்பரிமாற்ற இல்லங்களுக்கான முகாமைத்துவ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த பணப்பரிமாற்ற மற்றும் முகாமைத்துவ இல்லமானது குவைத்தில் கொமர்ஷல் வங்கியினதும் ஏனைய பிராந்திய பங்காளர்களினதும் பிரதான வாடிக்கையாளராகும்.

இலங்கையின் கீர்த்திமிக்க இசைக் கலைஞரும் வயலின் கலைஞரும் இசைத் தயாரிப்பாளருமான திணேஷ் சுபசிங்கவின் பங்களிப்பு இந்நிகழ்வின் கோடிட்டுக் காட்டக் கூடிய அம்சமாக இடம்பெற்றது. இலங்கையின் பிரபல தொகுப்பாளர் பாடகர் கலைஞர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் கிளிப்பர்ட் றிச்சர்ட்ஸின் பங்களிப்பும் நிகழ்ச்சிகளுக்கு மெருகூட்டின.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்பிரமணியம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க இங்கு பிரதான உரை நிகழ்த்தினார். குவைத்தின் பணப்பரிமாற்ற சந்தையில் இந்த முக்கியம் மிக்க நிகழ்வைக் கொண்டாடும் வகையில் சனத் மனதுங்க இரண்டு பிரத்தியேக ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்தார்.

பெப்ரவரி மாதத்தில் 20 நாட்கள் குவைத்தில் உள்ள தனது வர்த்தகப் பங்காளிகளுக்கு அவர்களுக்கான கட்டணங்களை அறவிடப் போவதில்லை. அத்தோடு விஷேட வைப்புக் கணக்கிற்கு (SDA) மற்றும் தனிநபர் வெளிநாட்டு நாணய வைப்புக்கு ஆகக் கூடுதலான வட்டி வீதம் என்பனவே அவையாகும். குவைத்தில் உள்ள பங்காளிகளுக்கு அவர்களின் கணிசமான பங்களிப்புக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட அவர் இந்த 20 வருட கால வெற்றிப் பயணத்துக்கான அவர்களின் பங்கை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில் குவைத்தில் உள்ள பணம் அனுப்பி வைக்கும் சேவையின் பங்காளிகள் தெரிவு செய்யப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர் வங்கிச் சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க வாடிக்கையாளர் சேவை மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவை தலைவர் பிரதீப் பந்துவன்ஸ உலகளாவிய பணம் அனுப்பல் பிரிவு சிரேஷ்ட முகாமையாளர் ரங்கிகா சந்திரசேன சந்தைப்படுத்தல் பிரிவு சிரேஷ்ட முகாமையாளர் இரோஷா வெத்தசிங்க திரைசேறி திணைக்கள பிரதிநிதி குவைத்தில் உள்ள வங்கியின் வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 12 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கி கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 269 கிளைகள் மற்றும் 943 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.

இலங்கையிலிருந்து சென்னைக்கு விமான சேவையை முன்னெடுக்கும் FitsAir

இலங்கையின் முதலாவது சர்வதேச தனியார் விமான சேவையான FitsAir, சென்னைக்கு அதன் விமான சேவையை ஆரம்பித்துள்ளதன் மூலம் சர்வதேச விமான பயண சேவையை மேலும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து சென்னைக்கு அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்நேரடி விமானம், ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்கப்படவுள்ளதோடு, ஏப்ரல் மாதம் முதல் தினமும் இடம்பெறும் சேவையாக மேம்படுத்தப்படவுள்ளது.

இப்புதிய சேவையானது FitsAir நிறுவனத்தின் A320 விமானம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு சௌகரியமான இருக்கைகளைக் கொண்டுள்ளதுடன், வசதியான நேரங்களிலும் இயங்குகின்றது. அந்த வகையில் இதன் அறிமுக சலுகையாக, ரூ. 55,400 எனும் கட்டணத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய இரு வழி விமான டிக்கெட்டை FitsAir வழங்குகிறது.

FitsAir விமான சேவையின் நிர்வாக பணிப்பாளர் Ammar Kassim அவர்கள், இது குறித்து தெரிவிக்கையில், எமது புதிய சேவையை சென்னைக்கு ஆரம்பிப்பதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இச்சேவையானது, வேகமாக வளர்ந்து வரும் சென்னை நகரத்திற்கு செல்வதற்கான, செலவு குறைந்த மற்றும் வசதியான வழியை எமது பயணிகளுக்கு வழங்கும். இந்தியாவுடனான எமது உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நாம் ஆவலுடன் உள்ளோம். என்றார்.

பல்வேறுபட்ட கலாசாரம் தொடர்பில் சென்னையானது பிரபலமாக விளங்கும் ஒரு நகரமாகும். ஆச்சரியமூட்டும் ஷொப்பிங் அனுபவம் மற்றும் பல்வேறு வகையான உள்ளூர் உணவு போன்ற விடயங்களுக்கும் அது புகழ் பெற்றது. சென்னை நகரம் தென்னிந்தியாவின் ஒரு மையமாக உள்ளதோடு, தமிழ்நாட்டின் ஏனைய நகரங்களுக்குச் செல்வதற்கான சிறந்த புகையிரத மற்றும் வீதிகளையும் அது கொண்டுள்ளது. FitsAir இன் இச்சேவை விரிவாக்கமானது, நிறுவனத்தின் தற்போதைய விரிவாக்க முயற்சியின் ஒரு பகுதி என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவான பயணத் தெரிவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொடர்பை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் இது நிரூபிக்கிறது. இந்த விமான சேவை 3 Airbus விமானங்களை கொண்டு இயங்குவதோடு, மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் குழுவையும் கொண்டுள்ளது.

சந்தையின் போட்டித் தன்மைக்கு இணையான விலை மற்றும் நியாயமான பயண அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், பிராந்தியத்தில் முன்னணியில் உள்ள குறைந்த கட்டண விமான சேவை வழங்குனராக திகழ்வதை FitsAir இலக்காகக் கொண்டுள்ளது. அதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தனது சேவையை வழங்க அது தயாராக உள்ளது. எதிர்வரும் காலாண்டில் மேலும் 3 புதிய இடங்களுக்கு FitsAir தனது சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ‘வாரத்தில் 4 நாட்கள் வேலை’ சோதனைத் திட்டம் வெற்றி

பிரிட்டனில் நடத்தப்பட்ட ‘வாரத்தில் 4 நாட்கள் வேலை’ சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் சோதனை திட்டத்தை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் செயற்படுத்தின.

இந்த சோதனையில் சில சுவாரசியமான வேறுபாடுகள் காணப்பட்டதாகவும் பணியாளர்கள் தங்களின் வேலை நேரத்தை சராசரியாக அதிகரித்ததை அவதானிக்க முடிந்ததாகவும் Oxford மற்றும் Cambridge பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்ட Boston கல்லூரியை சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான ஜூலியட் ஷோர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தீக்காயம் ஏற்படல், தூக்கப் பிரச்சினைகள் என்பன பாரிய அளவில் குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

4 நாட்கள் வேலைத் திட்டத்தின் சோதனையின் முடிவில், பெரும்பாலான நிறுவனங்கள் இந்த முறையை தொடரப் போவதாக அறிவித்துள்ளன.

கிட்டத்திட்ட 91% நிறுவனங்கள் இந்த திட்டத்தை தொடரப்போவதாகவும், 4% நிறுவனங்கள் இது குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்துள்ளன.

மேலும், 4% நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்தை தொடரப் போவதில்லை என தெரிவித்துள்ளன.

இந்த சோதனைக்கு சராசரியாக 10-க்கு 8.5 மதிப்புகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. வணிக உற்பத்தித் திறன் மற்றும் வணிக செயல்திறன் பிரிவுகளுக்கு 7.5 சதவிகித மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆண்டை இதே காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்களின் வருவாய் சுமார் 35 சதவிகிதம் அதிகரித்ததுடன் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.