Home Blog Page 320

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பினை உருவாக்க சுயாதீன குழு நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பினை உருவாக்குவதற்காக 10 பேர் கொண்ட சுயாதீன நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை அறிவிக்க முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனுவின் பிரகாரம் சிறந்த நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும், பொதுமக்களின் நலனுக்காக செயற்படும் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட யாப்பைத் தயாரிப்பது கிரிக்கெட்டின் அவசிய தேவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கடிதத்தின் பிரகாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் உரிய வரைபு சட்ட ஆலோசனையுடன் நிபுணர் குழு மூலம் விளையாட்டு சட்டங்களை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

நிர்க்கதியான விண்வெளி வீரர்களுக்காக ரஷ்யா அனுப்பிய அவசர மீட்புக் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் திரும்புவதற்கான விண்கலம் சிறிய விண்கல் மோதல் காரணமாக சேதமடைந்துள்ளதால், ரஷ்யா அனுப்பிய அவசர மீட்பு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது.

சோயுஸ் எம்எஸ்-23 எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், கஸகஸ்தானின் பய்கனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலைய பங்காளரான அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதனை நேரடியாக ஒளிபரப்பியது.

இவ்விண்கலம் நேற்றுஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. எனினும், சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள 3 வீரர்களும் பூமிக்குத் திரும்புவது எதிர்வரும் செப்டெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிராங்க் ரூபியோ மற்றும் ரஷ்யாவின் திமித்ரி பீட்லின், சேர்ஜி ப்ரோகோப்யேவ் ஆகியோர் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர்.

இவர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் எம்-எஸ்22 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். 6 மாத காலம் தங்கியிருந்த பின் எதிர்வரும் மார்ச் மாதம் அவர்கள் பூமிக்குத் திரும்பவிருந்தனர்.

ஆனால், அவர்கள் பூமிக்குத் திரும்புவதற்கான விண்கலத்தில் கடந்த டிசெம்பர் 14 ஆம் திகதி கூலன் கசிவு ஏற்படத் தொடங்கியது. சிறிய விண்கல் ஒன்று தாக்கியமையே இதற்குக் காரணம் என அமெரிக்க, ரஷ்ய விண்வெளித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

தற்போது விண்வெளி நிலையத்திலுள்ள 3 வீரர்களுக்கும் மாற்றீடாக இரு வீரர்களுடன் மார்ச் மத்தியில் எம்எஸ்23 விண்கலம் அனுப்பப்படவிருந்தது.

ஆனால், எம்எஸ்22 விண்கலத்தில் சேதம் ஏற்பட்டதால், தற்போது  சர்வதேச விண்வெளி நிலையத்திருள்ள மூவரும் எதிர்வரும் செப்டெம்பர் வரை தொடர்ந்தும் அங்கு தங்கியிருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீரர்கள் மூவருடன் இலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ட்ரகன் எனும் தனியார் விண்கலம் மூலம் கடந்த ஒக்டோபரில் அனுப்பப்பட்ட மேலும் நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர்.

இந்நால்வரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கும், 2 அமெரிக்கர்கள், ஒரு ரஷ்யர், ஒரு ஐக்கிய அரபு இராச்சிய விண்வெளி வீரர் உட்பட நால்வரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கும் ஸ்பேஸ் எக்ஸ் ட்ரகன் விண்கலமொன்று இன்று திங்கட்கிழமை விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி ராஜகிரிய மொரகஸ்முல்ல ஜனக ரணவக்க மைதானத்தில் நடைபெற்றது.

கொழும்பு மாவட்டத்தின் அனைத்து ஊடக நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் அடங்கிய 06 அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற . இறுதிப் போட்டியில் கேம் ஸ்விங்கர்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு ரைடர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

போட்டியின் ஆரம்ப நிகழ்வில் வெகுஜன ஊடக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குழுவினரும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ரைடர்ஸ் அணி 04 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளுக்கு 65 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கேம் ஸ்விங்கர்ஸ் அணி 04 ஓவர்கள் முடிவில் 02 விக்கெட்டுக்கு 21 ஓட்டங்கள மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொழும்பு ரைடர்ஸ் அணி 44 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்நிலையில், போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக கேம் ஸ்விங்கர்ஸ் அணியின் ரிஷான் மதுசங்கவும், சிறந்த பந்துவீச்சாளராக கொழும்பு ரைடர்ஸ் அணியின் அமலும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்தோடு இறுதிப்போட்டியின் ஹீரோவாக கொழும்பு ரைடர்ஸ் அணியின் டிலான் ப்ளெசண்ட்.தெரிவு செய்யப்பட்டார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்ய வீரர்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இது குறித்து மெத்வதேவ் தெரிவிக்கையில்,

‘இன்றைய போட்டி மிகவும் கடினமான போட்டியாக இருந்தது, ஏனெனில் காற்று அதிகம் வீசியது. இன்று கடுமையான போராட்டமாக இருந்தது.

சில நேரங்களில் நாங்கள் இருவரும் மோசமாக விளையாடினோம், சில சமயங்களில் இருவரும் நன்றாக விளையாடினோம்’ என்றார்.

T20 மகளிர் உலக கிண்ணத்தை 6வது முறையாக வென்றது அவுஸ்திரேலிய அணி

T20 மகளிர் உலக கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட், அவுஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார்.

மறுமுனையில் டாஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்கள், மரிசான் கேப் 11 ரன், கேப்டன் சுனே லஸ் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர்.

அதிரடி காட்டிய லாரா வால்வார்ட் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அவரது விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து சோல் டிரையான் 25 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அனெக் போஸ்ச் 1 ரன் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 ரன்களே எடுத்தது.

கடைசி வரை போராடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது.

இதனால் அவுஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

இதன் மூலம் T20 மகளிர் உலக கிண்ணத்தை 6 முறை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

NPP மீதான தாக்குதலுக்கு சஜித் கண்டனம்!

தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இத்தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக ´கொழும்பிற்கு எதிர்ப்பு´ என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டது.

அங்கு காயமடைந்த சுமார் 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு, இப்பன்வல சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிராக கோட்டை பொலிஸாரும் மருதானை பொலிஸாரும் இணைந்து இரண்டு நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில் நேற்று (26) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, போராட்டத்தை கைவிடுமாறு முன் வந்த போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்

ஆனால், அவர்கள் வீதியை மறித்த போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

52 வயதாகியும், எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை – ராகுல் காந்தி உருக்கம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசும்போது, 52 வயதாகும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என மிகவும் வருத்தமாக பேசியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடைபெற்று வந்தது. 3 நாட்கள் நடந்த இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக மாநாட்டின் நிறைவு நாளான நேற்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல்

காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பாரத் ஜோடோ யாத்திரை துவங்கி பல்வேறு விஷயங்களை மனம்விட்டு பேசி இருந்ததோடு, 52 வயதாகும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என மிகவும் வருத்தமாக கூறி இருந்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி ‘‘ 1997 பொது தேர்தலுக்குப் பிறகு நாங்கள் இருந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. அந்த சூழ்நிலை எங்களுக்கு புதிதாக இருந்தது. நான் எனது அம்மாவிடம் போய் என்ன நடந்தது என்று கேட்டேன். அவர் நாம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றார். அதுவரையில் அந்த வீடு எங்கள் வீடுதான் என்று நான்

நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே எதற்காக நாம் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அம்மாவிடம் கேட்டேன்.

அப்போதுதான் எனது தாயார் இது நமது வீடு கிடையாது. இது அரசினுடையது என்றார்கள். அப்படியென்றால் அடுத்து நாம் எங்கே போவோம் என அம்மாவிடம் கேட்டேன். அம்மாவோ அதற்கு தெரியவில்லை என்றார். இப்போது எனக்கு வயது 52, இன்னும் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை. எங்கள் குடும்பம் உத்தரப் பிரதேச மாநிலம்,அலகாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளது. அதுவும் இப்போது எங்களுடையது வீடு அல்ல. நான் இப்போது துக்ளக் லேனில் 12-ம் எண் வீட்டில் வசித்தாலும், அதுவும் எனது சொந்த வீடு கிடையாது.

இதனால் தான் நான் பாரத் ஜோடோ யாத்திரைக்கு தயாரானபோது, யாத்திரையில் என்னை சந்திக்க வருபவர்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தர வேண்டும் என்று கட்சியினரிடம் கூறினேன். யாத்திரைதான் எங்கள் இல்லம். அதன் கதவு, ஏழை, பணக்காரன், விலங்குகள் என எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்காகவும் திறந்திருக்கும்” என ராகுல் காந்தி உருக்கமாக கூறியிருந்தார் .

வங்கி பாதுகாவலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள திருக்கோவில் பிரதேசத்தில் வீடு ஒன்றில் வங்கியில் பாதுகாவலராக கடமையாற்றிவரும் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் வீ.சி வீதியைச் சோந்த 2 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நாகமணி கணேசமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த நபர் கடமையை முடித்துவிட்டு வீடுவந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை அவரது அறையை திறந்துபொது அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெற்று வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுர உண்மையான டீல்காரர்

வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் பாராளுமன்றத்திற்கு தீவைக்கச் சொன்ன லால் காந்தவிடமும் ஹதுன்நெத்தியிடமும் பொலிஸில் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை. இது அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என முடிந்தால் அனுர பதில் சொல்லட்டும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம தொகுதி மகளிர் தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், 2009 அல்லது 2010 இல் திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் உரை நிகழ்த்த வந்தேன். அன்றும் நான் ஜே.வி.பி பற்றிப் பேசினோம்.

இன்று பெருந்தொகையான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஜனநாயகம் பற்றி அநுரவின் கட்சியால் மாத்திரம் தான் பேச முடியுமா? அவ்வாறு நினைத்துத் தான் அவர் செயற்படுகிறார்.அவர் அவதூறு பேசலாம், பொய் சொல்லலாம், கூட்டங்கள் நடத்தலாம், ஆனால், கூட்டம் நடத்தி, நாம் ஏதாவது சொன்னால், அனைவரும் தம்மைக் குறை சொல்வதாக கூறுவார்.

மஹிந்த ராஜபக்ஷ நாட்டைக் காப்பாற்றிய தலைவர் என்பதாலேயே இந்நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். அவரை தெற்கிலர் இருந்து தான் பாராளுமன்றம் அனுப்பினீர்கள். தெற்கு மக்களுக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

2005 இல் 180,000 வாக்குகளால் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 இல் இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் ஆற்றிய பணியினால் தான் நாங்கள் வீதிகளை நிர்மாணித்தோம். அவரின் ஆட்சியில் தான் நெடுஞ்சாலைகளை அமைத்தோம். இப்போது ஜே.வி.பிக்கு மூன்று நான்கு மணித்தியாலங்களில் கதிர்காமம் செல்லக்கூடிய நெடுஞ்சாலைகளை அமைத்தது அவர்தான்.

காலிமுகத்திடலில் வைத்து அடி, கொல்லு என்று அநுர திஸாநாயக்க கூறினார். பிரதமர் அலுவலகத்தை பிடித்தனர். ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர். பிரதமரின் இல்லத்தை தீயிட்டு பாராளுமன்ற சந்திக்கு சென்று லால்காந்த என்ன சொன்னார். பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க சொன்னார்.

வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ஆனால் சுனில் ஹதுன்னெத்தியோ அல்லது லால்காந்தாவோ பொலிஸில் சென்று வாக்குமூலம் கொடுக்காது தப்பினர். இதற்கு அனுர திசாநாயக்க பதில் கொடுப்பாரா? அனுர உண்மையான டீல்காரர். வசந்த மட்டும் சிறைக்கு சென்றார். லால்காந்தவும் சுனில் ஹதுன்நெத்தி தியும் பொலிசுக்குக்கு கூட செல்லவில்லை. முடிந்தால் இதற்கு பதில் சொல்லட்டும் என்றார்.

மூன்று கொலை சம்பவங்கள் பதிவு

Yellow crime scene do not cross barrier tape in front of defocused background. Horizontal composition with selective focus and copy space.

நாட்டின் பல பகுதிகளில் மூன்று கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று (26) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் தனது வீட்டில் இருந்தபோது, ​​அவரது தாயாரின் இளைய சகோதரர் வீட்டிற்கு வந்து இறந்தவரையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

ரத்கம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லந்தோட்ட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

லந்தோட்டை அம்பலாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த போது, ​​பலர் வந்து கூரிய ஆயுதங்களால் தாக்கியதில், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.

பழைய முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.

இதேவேளை, திவுலபிட்டிய மரதகஹமுல சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மரதகஹமுல சந்திக்கு அருகில், வீதியில் பயணித்த காரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தடுத்து நிறுத்தி, கார் சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன், காரில் இருந்த ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (26) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதான வித்தினாபஹா என்பவரே உயிரிழந்துள்ளார்.