மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

Date:

உலகப் புகழ்பெற்ற மதுரையில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.

விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இரு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந்தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.

சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.

இந்தாண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்கு கோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந்தேதி) தொடங்கி வருகிற 13-ந்தேதி இரவு 9 மணி வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. இந்த பதிவின்போது, பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும்.

பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந்தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.

அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.

டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந்தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....