இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் கடந்த 37 வருடங்களாக அங்கம் வகித்துவந்த மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அருளானந்தம் பிலிப்குமார் அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
தாம் பதவி விலகியமைக்கான காரணம் குறித்து ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய கட்சியின் நிலைமைகள் குறித்து மக்களுக்கு சில உண்மைகள் தெரிய வேண்டியுள்ளது.
வீடமைப்புத் திட்டமென்றாலும் , அபிவிருத்திகள் என்றாலும் தற்போது கட்சியில் புதிதாக இணைந்து கொண்டவர்களும் உயர்மட்ட பிரமுகர்களும் தரகு பணத்தை எதிர்பார்த்தே வேலை செய்கின்றனர்.
இவர்களின் இந்த புதிய போக்கினால் தொழிலாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் வேதனப் பிரச்சினை, அவர்களின் நிலவுரிமை மற்றும் குடியிருப்பு தொடர்பில் இவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்துமே நாடகமாகும்.
இதை என்னால் ஆதாரமாக நிரூபிக்க முடியும். இவ்வாறு தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்யும் ஒரு அமைப்பில் மனசாட்சியை ஒரு பக்கம் கழற்றி வைத்து விட்டு என்னால் அங்கம் வகிக்க முடியாது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர்கள் மீது அக்கறையின்மை, கட்சியில் நிலவும் ஊழல் உள்ளிட்ட காரணங்களுக்காகவே தாம் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்தாக அருளானந்தம் பிலிப்குமார் தெரிவித்துள்ளார்.




