நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இணக்கப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான மொண்டெகு சரத்சந்ரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்த போது, அவர் அந்த பதவியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதானது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்றைய விசாரணையின் போது, எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்காக முன்னிலையாவதில்லை என்றும் தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி அறியப்படுத்தியுள்ளார்.
அது தொடர்பில் திருப்தி கொள்வதாகவும் மனுவை இணக்கப்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு இணங்குவதாகவும் மனுதாரர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி அறிவித்துள்ளார்.




