என்னை பார் யோகம் வரும்

Date:

நம் ஊரில் ஒவ்வொரு பழமொழிக்கு பின்னாலும் ஒரு மிகப் பெரிய பழங்கால கதை ஒளிந்து கொண்டுள்ளது. “என்னை பார் யோகம் வரும்” என்று கழுதைக்கு ஒரு பழமொழி சொல்லுவார்கள். கழுதை படத்தை மாட்டி வைத்துவிட்டு அந்த பழமொழியையும் அதில் எழுதி வைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த பழமொழி கழுதைக்கு ஏன் சொல்லப்படுகிறது? கிருஷ்ணர் பிறந்ததற்கும் கழுதைக்கும் என்ன சம்பந்தம்? என்னும் சுவாரசியமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் காண இருக்கிறோம்.

கொடிய அரக்கனான கம்சனின் உயிர் அவனது தங்கைக்கு பிறக்கப் போகும் எட்டாவது குழந்தையால் தான் நிகழும் என்பது அசரீரி வாக்கு. இதை அறிந்து கொண்ட கம்சன் உடனே தன் தங்கையான தேவகியையும், அவருடைய கணவரான வசுதேவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அவர்களுக்கு பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சனிடம் ஒப்படைப்பதாக வாசுதேவர் கூறிய பின்பே அவர்களை கொல்லாமல் சிறையில் அடைத்தான்.

ஒவ்வொரு முறை குழந்தை பிறக்கும் சமயத்தில், காவலுக்கு காவலாளிகளுடன் ஒரு கழுதையையும் கட்டி வைப்பான். கம்சன் காவலாளிகளை முழுமையாக நம்பவில்லை. கழுதைக்கு மோப்ப சக்தி அதிகம் இருக்கும். குழந்தை பிறந்தால் தன் மோப்ப சக்தியினால் கழுதை கனைக்க ஆரம்பித்து விடும். இப்படி ஏழு குழந்தைகள் பிறக்கும் பொழுதும் கழுதை கனைத்து கம்சனுக்கு எச்சரிக்கை செய்தது. இப்படி ஒவ்வொரு குழந்தையாக கம்சனும் கொன்று விடுவான்.

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கும் பொழுது வசுதேவர், அந்த கழுதையிடம் சென்று தயவு செய்து கத்தி விடாதே என்று காலில் விழுந்து கெஞ்சுவதாக புராணங்கள் சொல்கிறது. அவருடைய பேச்சைக் கேட்டு கழுதையும் சத்தம் போடவில்லை. இதனால் கிருஷ்ணரின் உயிரை கம்சனிடமிருந்து வசுதேவர் காப்பாற்ற நேர்ந்தது. அன்று முதல் கழுதைக்கு மிகப்பெரிய யோகம் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கழுதை பொதி சுமந்தாலும், கழுதையை பார்ப்பவர்களுக்கு நல்ல யோகம் வரும். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே “காரியம் ஆக வேண்டுமென்றால் கழுதை காலையும் பிடிக்கலாம்” என்கிற பழமொழியும் வந்தது.

வசுதேவர் கழுதை காலில் விழும்படியான இந்நிகழ்வுகளை விவரிக்கும் வகையிலான நுணுக்கமான சிற்பங்கள் கர்நாடகாவில் அமிர்தாபுரம் அமிர்தேஸ்வரர் கோவிலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் புராதன பல வரலாற்று சிற்பங்கள், அங்கு பார்ப்பதற்கு வியக்கும் வகையில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளில் ஆர்வம் உள்ளவர்களும், புராண கதைகளில் நாட்டம் உள்ளவர்களும், கிருஷ்ண பக்தர்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த கோவிலை சுற்றி பார்க்க வேண்டும்.

சகுன சாஸ்திரத்தின் படி ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது கழுதையை பார்க்க நேர்ந்தால் யோகம் வரும் என்று சொல்லுவார்கள். கிருஷ்ணருக்காக வசுதேவரின் சொல் கேட்டு கழுதை தன் இயல்பை மீறி கனைக்காமல் ஸ்ரீ கிருஷ்ணரின் உயிரை காப்பாற்ற உதவி செய்ததால், அந்த கழுதைக்கு இவ்வாறான வரம் கிடைத்ததாக நம்பப்படுகிறது. அதனால் தான் கழுதை உடைய புகைப்படங்களை வீட்டிலும், கடைகளிலும் எல்லோரும் அதிர்ஷ்டத்திற்காக மாட்டி வைப்பார்கள். ஒரு விஷயம் நமக்கு சாதகமாக முடிய வேண்டும் என்றால், பொறுமை மிகவும் முக்கியம். அந்த பொறுமையை காட்டிலும் நடக்க இருக்கும் நல்லவைக்காக யாருடைய காலையும் பிடிக்கலாம் என்னும் விஷயத்தை தான் இக்கழுதையின் மூலமாகவும் பழமொழியாக சொல்லப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....