அரச அதிகாரிகள் உரிய வகையில் செயற்படாமையினால் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாகக் கூறப்படும் இடங்களை நேற்று பார்வையிட்டதன் பின்னர் அமைச்சர் சந்திரசேகர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
சட்ட விரோதமாக சுண்ணக்கற்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் கட்டுமானப்பொருள் விற்பனை நிலையமொன்றின் பாரவூர்தியொன்று அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் இடைமறிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், உரிய அனுமதியுடன் அகழப்பட்ட சுண்ணக்கற்களே குறித்த வாகனத்திலிருந்ததாகவும் தாங்கள் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடவில்லை எனவும் குறித்த கட்டுமானப் பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் நேற்று முன்தினம் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக சுண்ணக்கல் அகழாக்கப்படுவதாகக் கூறப்படும் இடங்களை நேற்று பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் தாங்கள் பார்வையிட்ட இடங்களில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெறுகிறது என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளக்கூடியதாக உள்ளதென கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது தெரிவித்துள்ளார்.




